விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 5 Dec 2020 4:30 AM IST (Updated: 4 Dec 2020 11:40 PM IST)
t-max-icont-min-icon

விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கயத்தாறு, 

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பரும்புகோட்டையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஒரு சங்கத்தில் இருந்து பிரிந்து சென்று, மற்றொரு சங்கம் ஆரம்பிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினருக்கே அரசின் ஆதரவு இருக்கும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா அமலாக்கத் துறையினரிடம்தான் விவாதிக்க வேண்டும். அவர் அரசியலுக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்டுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் தமிழகத்தில் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை.

கொரோனா ஊரடங்கு காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், புதிய திரைப்படங்களை ஓ.டி.டி. முறையில் வெளியிட்டனர். இது தற்காலிக ஏற்பாடு என்ற முறையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஊரடங்கு தளர்வில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் ஓ.டி.டி. முறையிலேயே புதிய திரைப்படங்களை வெளியிடுவது உகந்தது கிடையாது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவோம் என்று அந்த திரைப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்காக அந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அன்பு தம்பி நடிகர் விஜய்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாகும் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி கேட்டால் அரசு பரிசீலனை செய்து அனுமதி அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story