நெல்லை-தூத்துக்குடியில் மிதமான மழை சாலைகளில் தண்ணீர் தேங்கியது


நெல்லை-தூத்துக்குடியில் மிதமான மழை சாலைகளில் தண்ணீர் தேங்கியது
x
தினத்தந்தி 5 Dec 2020 4:30 AM IST (Updated: 4 Dec 2020 11:58 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை-தூத்துக்குடியில் நேற்று மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

தூத்துக்குடி, 

வங்க கடலில் உருவாகி தென் தமிழகத்தை நோக்கி வந்த ‘புரெவி’ புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. நேற்று பொது விடுமுறை அளிக்கப்பட்டது. ரெயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

ஆனால், வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போன்று எதுவும் நடக்கவில்லை. தூத்துக்குடி-நெல்லை மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக வானம் மேகமூட்டமாக மட்டுமே காணப்பட்டது. நேற்று முன்தினம் விட்டு, விட்டு மழை பெய்தது. எனவே, பூச்சாண்டி காட்டிய ‘புரெவி‘ புயல் குறித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் அதிக அளவில் பகிரப்பட்டன.

இதற்கிடையே, இந்த புயல் வலுவிழந்து நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டது. இதனால் நேற்று அதிகாலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி அருகே, திருச்செந்தூர் ரோடு, தபால் தந்தி காலனி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மோட்டார் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி அப்புறப்படுத்தினர். தூத்துக்குடி தெற்கு பீச் ரோடு பகுதியில் கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது. தூத்துக்குடியில் இரவில் சாரல் மழை பெய்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை திருச்செந்தூரில் 24 மில்லி மீட்டர் மழையும், காயல்பட்டினம் 30, விளாத்திகுளம் 12, வைப்பார் 33, சூரங்குடி 31, கோவில்பட்டி 3.5, கயத்தாறு 1, கடம்பூர் 4, ஓட்டப்பிடாரம் 5, மணியாச்சி 5, வேடநத்தம் 12, கீழ அரசடி 9, எட்டயபுரம் 9, ஸ்ரீவைகுண்டம் 1, தூத்துக்குடி 29.6 மில்லி மீட்டர் மழையும் பெய்து உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘புரெவி’ புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தூத்துக்குடி வரை வரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதுவரை எந்தவித சேதமும் ஏற்படவில்லை. கொள்ளை நோய்கள் வராத அளவுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்களும் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

தொடர்ந்து மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. நிவாரண முகாம்களும் தயார் நிலையில் இருக்கிறது. கொரோனாவும் அதிகரித்து விடக்கூடாது என்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. நிவாரண முகாம்களில் இருந்த மக்கள் அனைவரும் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். அடுத்த அறிவிப்பு வரும் வரையிலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 9 வீடுகள் முழுமையாகவும், 105 வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன. 2 பேர் இறந்துள்ளனர். 6 கால்நடைகள் இறந்துள்ளன என்று பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெல்லை-தென்காசி மாவட்டங்களிலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். மாவட்டந்தோறும் கண்காணிப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு, தாழ்வான பகுதிகள், கடற்கரை, ஆற்றங்கரைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

ஆனால், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ‘புரெவி’ புயல் பூச்சாண்டி காட்டி சென்றது. பருவமழையை எதிர்பார்த்து இருந்த விவசாயிகளும் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று முன்தினம் விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று பிற்பகல் வரை பெரும்பாலான இடங்களில் மேகமூட்டமாக இருந்தது. சில இடங்களில் தூறல் மட்டுமே காணப்பட்டது.

மாலையில் நெல்லையில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து இரவு 7 மணி அளவில் மிதமான மழை பெய்ய தொடங்கியது. இரவிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. களக்காடு, மூலக்கரைப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளிலும் இரவில் பலத்த மழை பெய்தது. தென்காசி மாவட்டம் சிவகிரி, செங்கோட்டை பகுதியிலும் இரவில் மிதமான மழை பெய்தது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

குண்டாறு-4, பாபநாசம்-3, பாளையங்கோட்டை-3, சங்கரன்கோவில்-2, களக்காடு-1.6, நெல்லை-1, செங்கோட்டை-1, சிவகிரி-1, அடவிநயினார்-1.

நெல்லையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்த நிலையில், பாளையங்கோட்டை மூர்த்திநாயனார் தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர் இருதயராஜின் (வயது 70) வீட்டின் மேற்கூரை நேற்று திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் காயம் அடைந்த இருதயராஜை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Next Story