தஞ்சை மாவட்டத்தில், தொடர் மழை: 21 ஆயிரத்து 785 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின; நிலக்கடலை-சோளமும் பாதிப்பு


நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்திருப்பதை விவசாயி வேதனையோடு கையில் எடுத்து பார்த்தபோது எடுத்த படம்
x
நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்திருப்பதை விவசாயி வேதனையோடு கையில் எடுத்து பார்த்தபோது எடுத்த படம்
தினத்தந்தி 5 Dec 2020 4:15 AM IST (Updated: 5 Dec 2020 4:15 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் 21 ஆயிரத்து 785 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. நிலக்கடலை-சோளப்பயிர்களும் பாதிக்கப்பட்டன.

தொடர் மழை
தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 3 லட்சத்து 17 ஆயிரத்து 500 ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை தாண்டி இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 5 ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில இடங்களில் வாய்க்கால்களில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் தண்ணீர் செல்ல முடியாமல் சாலைகளிலும், வயல்வெளிகளுக்குள்ளும் சென்று கொண்டு இருக்கின்றது.

கணக்கெடுப்பு பணி
தஞ்சையை அடுத்த காட்டூர், வரவுக்கோட்டை, துறையுண்டார்கோட்டை, மடிகை, ஒரத்தநாடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இவற்றில் இன்னும் 2 வாரங்களில் அறுவடை செய்யக்கூடிய நெற்பயிர்களும் அடங்கும்.

மேலும் நெற்பயிர்களில் கதிர் பிடிக்கக்கூடிய நேரத்தில் மழை பெய்வதால் நெற்பயிர்கள் பதராகிவிடுமோ என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் முழுவதும் எத்தனை ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்று கணக்கெடுக்கும் பணியில் வேளாண்மைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், இளம் நெற்பயிர்கள் என 2 பிரிவாக பிரித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

21,785 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
நேற்றுபிற்பகல் வரை கணக்கெடுக்கப்பட்டதில் தஞ்சை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 785 ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இவற்றில் 3 ஆயிரத்து 750 ஏக்கரில் மூழ்கியவை முன்பட்ட சம்பா நெற்பயிர்களாகும். இவைகள் அறுவடைக்கு தயாராக உள்ளவை. மீதமள்ள 18 ஆயிரத்து 35 ஏக்கரில் மூழ்கியவை இளம்பயிர்களாகும். மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி தஞ்சை மாவட்டத்தில் காட்டூர், வரவுக்கோட்டை, சூரக்கோட்டை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பொங்கல் கரும்பும் சாய்ந்துள்ளன. இதுவரை 25 ஏக்கரில் கரும்பு சாய்ந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 75 ஏக்கரில் நிலக்கடலையும், 75 ஏக்கரில் சோளப்பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதிகாரிகள் கருத்து
இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறும்போது, வளர்ச்சி பருவத்தில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தாலும் 5 நாட்களுக்கு தாக்குபிடிக்கும். மழை நின்றவுடன் தண்ணீர் வடிந்துவிட்டால் நெற்பயிர்களை காப்பாற்றிவிடலாம். ஆனால் சாய்ந்த பயிர்கள் தப்பிப்பது கடினமானது. தொடர்ந்து தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றனர்.

Next Story