தமிழகத்தில் நிவர் புயல், மழை சேதங்களை மதிப்பிட மத்திய குழுவினர் இன்று வருகை; 4 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு
தமிழகம், புதுச்சேரியில் நிவர் புயல், மழை ஏற்படுத்திய சேதங்களை கணக்கிட மத்திய குழுவினர் இன்று வருகின்றனர். 4 நாட்கள் தங்கியிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
புயல்களால் சேதம்
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு நிவர் புயல் வீசியது. இது கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
நிவர் புயல் வீசிச்சென்ற ஓரிரு நாட்களுக்குள் புரெவி புயல் உருவாகி கன்னியாகுமரி, ராமேசுவரம் இடையே கரையை கடந்தது. இந்த புயல்கள் வீசியபோது கனமழையும் பெய்தது. இதனால் ஏராளமான வாழை, தென்னை போன்ற மரங்கள் சரிந்தன.
நெல் உள்ளிட்ட பயிர்கள் நீருக்குள் மூழ்கின. பல கால்நடைகள் இறந்ததோடு வீடுகளும் சேதமடைந்தன.
7 அதிகாரிகள் குழு
புயல், மழையால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு நிவாரணமாக மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.
அதன் எதிரொலியாக நிவர் புயல், மழை ஏற்படுத்திய சேதங்களை கணக்கிட மத்திய அரசு, மத்திய உள்துறை இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் குழு ஒன்றை தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது.
இந்த குழுவில் ஐதராபாத்தில் உள்ள மத்திய வேளாண்துறையின் எண்ணெய் வித்துகள் வளர்ச்சி இயக்குனர் மனோகரன், மத்திய சாலை போக்குவரத்துத்துறை மண்டல அதிகாரி ரணன்ஜெய் சிங், டெல்லியில் உள்ள மத்திய நிதித்துறை இயக்குனர்களில் ஒருவரான பர்தெண்டு குமார் சிங், மத்திய மின்சார குழுமத்தின் துணை இயக்குனர் ஓ.பி.சுமன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் தர்மவீர் ஜா, மத்திய மீன்வள மேம்பாட்டு ஆணையர் பால் பாண்டியன், சென்னையில் உள்ள மத்திய நீர் ஆணைய கண்காணிப்பு இயக்குனர் ஜெ.ஹர்ஷா ஆகிய 7 பேர் உள்ளனர்.
முதல்-அமைச்சருடன் சந்திப்பு
மத்திய குழுவினர் இன்று (5-ந்தேதி) மதியம் 1 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு வருகின்றனர். சென்னை லீலா நட்சத்திர ஓட்டலில் அவர் கள் தங்குகின்றனர். அங்கிருந்து புறப்பட்டு தலைமைச் செயலகத்திற்கு மத்திய குழுவினர் செல்கின்றனர்.
அங்கு 3.30 மணிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் கே.சண்முகம் ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கின்றனர். அரை மணிநேரம் இந்த சந்திப்பு நிகழும்.
பின்னர் மத்திய குழுவினருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, புயல், மழை சேதங்கள் தொடர்பான விளக்கம் அளிப்பார். அப்போது பட காட்சியும் அவர்களுக்கு காட்டப்படும்.
ஒரு மணிநேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு மாலை 5 மணியளவில் அரசுத் துறை உயர் அதிகாரிகளை மத்திய குழுவினர் சந்தித்து பேசுகின்றனர். இரவு 7 மணிவரை இந்த கூட்டம் நீடிக்கும். பின்னர் மத்திய குழுவினர் ஓட்டலுக்கு சென்று தங்குவார்கள். அவர்கள் 4 நாட்கள் தமிழகம், புதுச்சேரியில் ஆய்வு மேற்கொள்கிறார்கள்.
Related Tags :
Next Story