கனமழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த வேன்கள் விபத்தில் சிக்கியது: 17 பெண்கள் காயம்; படுகாயமடைந்த 4 பெண்களுக்கு தீவிர சிகிச்சை
கும்மிடிப்பூண்டி அருகே கடும் மழை காரணமாக இருவேறு வேன்கள் விபத்துக்குள்ளானதில் மொத்தம் 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். லேசான காயம் அடைந்த 17 பெண்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
11 பெண்கள் காயம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணம்பாக்கம் கிராமத்தில் இருந்து மாநெல்லூர் வழியாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை நோக்கி வேன் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அதில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்கள் 11 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். வேனை டிரைவர் வினோத் (வயது 22) என்பவர் ஓட்டி வந்தார்.
மாநெல்லூர் அருகே வேன் வரும் போது, சாலையின் குறுக்கே மாடு வந்ததால் டிரைவர் திடீரென பிரேக் போட்டு வேனை நிறுத்தினார். கனமழை காரணமாக வேன் அப்படியே சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லேசான காயம் அடைந்த மாநெல்லூரைச் சேர்ந்த பாரதி, சுதா, சவுமியா, மோகனா, ஜீவிதா, கண்ணம்பாக்கம் தனம் மற்றும் புனிதா உள்பட 10 பெண்கள் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதில் பவித்ரா (37) மட்டும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கட்டுப்பாட்டை இழந்த வேன்...
அதேபோல கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் இருந்து ஒரு வேனில் பெண்கள் 10 பேர் அம்பத்தூர் தொழிற்சாலை ஒன்றுக்கு நேற்று காலை வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். வேனை டிரைவர் அஜீத் (24) என்பவர் ஓட்டிச் சென்றார்.
கனமழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த வேன், கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் ரெயில்வே மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது வேகமாக மோதியதால் அதில் பயணம் செய்த 7 பெண்கள் லேசான காயம் அடைந்த நிலையில் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதில் வழுதிலம்பேடு கிராமத்தை சேர்ந்த அமுதா(34), லாவண்யா (27), சோபனா (27) ஆகிய 3 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story