முன்னாள் மாணவர்கள் என்று அறிமுகமாகி மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு; வாலிபர், இளம்பெண்ணுக்கு வலைவீச்சு
பஸ்சுக்காக காத்திருந்த ஆசிரியையிடம், முன்னாள் மாணவர்கள் என்று அறிமுகமாகி மோட்டார்சைக்கிளில் ஏற்றி சென்று நகையை பறித்த வாலிபரையும், இளம்பெண்ணையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற ஆசிரியை
நிலக்கோட்டை அருகே உள்ள கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் பிரேமா (வயது 68). ஓய்வு பெற்ற ஆசிரியை. நேற்று இவர், நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 20 வயது வாலிபரும், 25 வயது இளம்பெண்ணும் அருகே சென்று தங்களை அவரது முன்னாள் மாணவர்கள் என்று அறிமுகப்படுத்தி கொண்டனர்.
பிறகு நீங்கள் ஏன் இங்கே நிற்கிறீர்கள் என்று அவர்கள் பிரேமாவிடம் கேட்டனர். அப்போது பிரேமா, நான் வத்தலக்குண்டு போவதற்காக பஸ்சுக்கு காத்திருக்கிறேன் என்றார். உடனே மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள், நாங்களும் வத்தலக்குண்டு தான் போகிறோம், எங்களுடன் பின்னால் உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று அக்கறையுடன் கூறினர்.
நகை பறிப்பு
இதையடுத்து, பிரேமா தன்னிடம் படித்தவர்கள் நன்றி விசுவாசத்துடன் உதவி செய்கிறார்களே? என்று நம்பி மோட்டார்சைக்கிளில் ஏறி அந்த இளம்பெண்ணுடன் சேர்ந்து அமர்ந்தார். ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் பயணம் செய்தனர். மோட்டார்சைக்கிளை வாலிபர் ஓட்டினார்.
நிலக்கோட்டை-வத்தலக்குண்டு சாலையில் பூசாரிபட்டி பிரிவு என்ற இடத்தில் சென்றபோது அந்த வாலிபர் திடீரென மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். உடனே பிரேமாவும், இளம்பெண்ணும் கீழே இறங்கி நின்றனர். இந்த சமயத்தில் அந்த வாலிபர், கண்ணிமைக்கும் நேரத்தில் பிரேமா கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் சங்கிலியை பறித்தார்.
பின்னர் அந்த வாலிபரும், இளம்பெண்ணும் மோட்டார்சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் வத்தலக்குண்டு நோக்கி தப்பி சென்று விட்டனர். இதனால் திகைத்து போன பிரேமா என்ன செய்வது? என தவித்தார். இது தொடர்பாக அவர், இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிந்து தப்பிச்சென்ற வாலிபரையும், இளம்பெண்ணையும் வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story