சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி மதுரையில் இருந்து தொடங்கும்; அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் சூளுரை
எந்த கொம்பன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி மதுரையில் இருந்து தொடங்கும் என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் பேசினர்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முல்லை பெரியாறு குடிநீர் திட்ட விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
அஞ்சி நடுங்குகிறார்கள்
முல்லை பெரியாறு திட்டம் எங்கள் சந்ததி மடுமல்ல வருங்கால சந்ததியினரின் தாகத்தை தீர்க்க போகும் திட்டம். எங்களது தாகத்தை தீர்த்த முதல்-அமைச்சர் எங்களை பொறுத்தவரை 2-வது பென்னிக் குயிக். இனி மதுரை மக்களுக்கு அண்டா வேண்டாம், குண்டா வேண்டாம். குடங்களில் தண்ணீர் தேக்கி வைக்க வேண்டாம். கணவர்களையும், மாமியார்களையும் குடம் தூக்கி வரச்சொல்லி வேலை வாங்க வேண்டாம். இனி தானாக குழாய்களில் 24 மணி நேரமும் தண்ணீர் வரும். இன்று போய் விடும், நாளை போய் விடும் என்று சொல்லப்பட்ட இந்த ஆட்சியை தனது சாதனை திட்டங்கள் மூலம் நிலை நிறுத்திய முதல்-அமைச்சரை கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சி நடுங்குகிறார்கள்.
நல்ல ஆட்சி நடந்தால் மழை மும்மாரி மொழியும் என்று வள்ளுவர் சொன்னார். அவரது வாக்குக்கு ஏற்ப இன்று தமிழகத்தில் நல்லாட்சி நடந்து கொண்டு வருகிறது. எனவே இங்கு மழை மும்மாரி மொழிந்து கொண்டு இருக்கிறது. குடிமராமத்து திட்டப்பணிகளால் கண்மாய்கள், குளங்கள் தூர்வாரப்பட்டு நீர் நிரம்பி உள்ளன. கடந்த காலங்களில் மதுரைக்கு கிள்ளி கூட கொடுக்காத ஆட்சி நடந்தது. ஆனால் ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிசாமியும் அள்ளி, அள்ளி கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
அரசின் திட்டங்களை பட்டியலிட்டால் நேரம் போதாது. பல ஆயிரம் கோடி மதிப்பினால திட்டங்களால் மதுரையில் நடந்து வருகிறது. எத்தனை கட்சிகள் வந்தாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இந்த கட்சியை எந்த கொம்பானாலும் ஒன்றும் செய்ய முடியாது. மக்களே எஜமானர்கள். அந்த எஜமானார்கள் மீண்டும் எங்களை ஆட்சி கட்டிலில் அமர்த்துவார்கள். 2021-ம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:-
போற்றுவார்கள்
மதுரை வரலாற்றில் இன்று ஒரு பொன்நாள். பெற்ற தாயை எப்படி ஆயுள் முழுவதும் போற்றுவார்களோ, அதேபோல் தாகம் தீர்ப்பவர்களையும் நன்றியோடு போற்றுவார்கள். அந்த வகையில் மதுரையின் தாகம் தீர்த்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நன்றியோடு போற்றுவார்கள். சிறப்பான திட்டங்களை செயல்படுத்துவதிலும், நீர் மேலாண்மையிலும் முதல்-அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பாராட்டி இருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை எங்கு தொடங்குவது என்று அனைவரும் சிந்தித்து கொண்டு இருந்த போது, மதுரையில் தான் இந்த நிகழ்ச்சியை தொடங்க வேண்டும் என்று சொன்னவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதனால் தான் அந்த நிகழ்ச்சி மதுரையில் தொடங்கியது. அந்த நிகழ்ச்சியில் தான் முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். அந்த அறிவிப்பு இன்று நடைமுறைக்கு வந்து இருக்கிறது. அதேபோல் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்திற்கு பூமி பூஜை போட்ட முதல்-அமைச்சர் அதனை திறந்து வைத்து இருக்கிறார்.
மதுரையில் தொடங்கும்
திட்டங்களை சொல்வதோடு மட்டுமல்லாமல், அதனை நிறைவேற்றுவதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நிகர் யாரும் இல்லை. முதல்-அமைச்சரின் யூகங்கள் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகி இருக்கிறது. இயற்கை புயலாக இருந்தாலும் சரி, செயற்கை புயலாக இருந்தாலும் சரி முதல்-அமைச்சரின் யூகத்தால் அவை அனைத்தும் தூள், தூளாகி விடும். அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு மீண்டும் அமைவதற்கு மதுரை உறுதுணையாக இருக்கும். இங்குள்ள 10 சட்டசபை தொகுதிகளையும் அவருக்கு பரிசாக
வழங்குவோம். முதல்- அமைச்சரின் வெற்றி செய்தி மதுரையில் இருந்து தொடங்கும் என்று உறுதியாக கூறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story