அரியலூர் மாவட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை மரங்கள், நெற்கதிர்கள் சாய்ந்தன


அரியலூர் மாவட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை மரங்கள், நெற்கதிர்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 5 Dec 2020 6:15 PM IST (Updated: 5 Dec 2020 6:08 PM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரங்கள், நெற்கதிர்கள் சாய்ந்தன.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. ஜெயங்கொண்டம் பகுதியில் மூன்றாவது நாளாக நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. மழையால் பல்வேறு இடங்களில் மண் சுவர் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன. மழை காரணமாக சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனால் நீண்ட நேரம் மின்சாரம் தடைபட்டது.

மேலும் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில் வசிக்கும் தஸ்தகீர் என்பவருடைய வீட்டின் அருகில் இருந்த புளியமரம் சூறைக்காற்றில் அடியோடு சாய்ந்து, அவரது வீட்டின் மீது விழுந்தது. இதனால் நள்ளிரவில் வீட்டை விட்டு அனைவரும் வெளியேறினர். இதேபோல் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் பல்வேறு இடங்களில் முருங்கை உள்பட பல்வேறு மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் இடையே உள்ள வயர்கள் மீது விழுந்துள்ளன. இதனால் சில இடங்களில் மின்கம்பங்கள் உடைந்து விழுந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. மேலும் விழுந்த மின் கம்பங்களை மாற்றும் பணியில் ஜெயங்கொண்டம் மின்சார வாரியத்தினர் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உடையார்பாளையம் கடைவீதியில் பலத்த மழையின் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்து காணப்பட்டது. ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பின. உடையார்பாளையம் பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தங்களின் ஆடு, மாடுகளை மேய்க்க செல்ல முடியாமலும் நிலங்கள் மற்றும் வயல்களுக்கு செல்ல முடியாமலும் தவித்தனர். இருப்பினும் மழையால் முந்திரி விவசாயிகள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியடைந்தனர்.

நேற்று மாலை முதல் மீன்சுருட்டி சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. விடியவிடிய கனமழை பெய்ததால் இந்த பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் பாம்பன் அருகே புரெவி புயல் கரையை கடந்த போது தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காற்றின் காரணமாக மின் பாதைகளில் பல்வேறு இடங்களில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, நேற்று மதியம் 3 மணி அளவில் ஒவ்வொரு கிராமமாக படிப்படியாக மின் வினியோகம் சீர் செய்யப்பட்டது. பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருந்த சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் நீர் விரைவாக வடிவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.

தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. டெல்டா பாசன பகுதியான இப்பகுதியில் பல்வேறு பாசன வாய்க்கால்களும் வடிகால் வாய்க்கால்களும் தூர்வாரப்படாமல் இருந்தன. இதனால் இடங்கண்ணி, தென்கச்சிபெருமாள்நத்தம், கீழக்குடிகாடு, மேலக்குடிகாடு, அடிக்காமலை, கூத்தங்குடி, வாழைக்குறிச்சி, பாலசுந்தரபுரம், காரைக்குறிச்சி, மதனத்தூர், அருள்மொழி, சோழமாதேவி, கோடாலிகருப்பூர், அண்ணங்காரம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வடிவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்வதால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சூறைக்காற்றுடன் மழை பெய்தபோது பல வயல்களில் விளைந்து நின்ற நெற்பயிர்கள் சாய்ந்துகிடக்கின்றன.

வெள்ள நீர் வடிய வாய்ப்பு இல்லாமல் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்கள் அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். காற்று மற்றும் மழையினால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. காரைக்குறிச்சி கிராமத்தில் கும்பகோணம்- சென்னை சாலையில் நேற்று முன்தினம் இரவு புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் சென்னை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக விரைந்து செயல்பட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் மரத்தை எந்திரங்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

அதேபோல் ஒவ்வொரு ஊராட்சியிலும் மின் பாதைகளிலும் சாலைகளிலும் விழுந்த மரங்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டன. தா.பழூர் காலனி தெருவில் வசிக்கும் கோவிந்தராஜ் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து அவர் வீட்டின் அருகில் இருக்கும் ராமதாஸ் என்பவரின் வீட்டு சுவற்றில் விழுந்ததில் ராமதாஸ் வீட்டு சுவர் உள் பக்கம் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டிற்குள்ளே இருந்த ராமதாஸ் தலையில் சுவரின் கற்கள் விழுந்ததில் சிறு சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். தா.பழூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து வருகின்றன. அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியை செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு அந்தந்த பகுதிகளில் நிவாரண முகாம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

அரியலூர்-74, திருமானூர்-96.8, ஜெயங்கொண்டம்-110, செந்துறை-95.

இதே போல் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

அரியலூர்-21, திருமானூர்-6.8, ஜெயங்கொண்டம்-24, செந்துறை-20 ஆகும்.

Next Story