சென்னையில் மழை விட்டும் வடியாத மழைநீர்; பொதுமக்கள் அவதி, நோய்த்தொற்று அபாயம்


சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது
x
சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது
தினத்தந்தி 6 Dec 2020 4:07 AM IST (Updated: 6 Dec 2020 4:07 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மழை விட்டும் வடியாத மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.

மழைநீர் தேக்கம்
சென்னையில் ‘நிவர்’ புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் முழுமையாக வடிவதற்குள் ‘புரெவி’ புயல் காரணமாகவும் மழை பெய்து வந்தது. நேற்று காலையிலும் சென்னை பாரிமுனை, மெரினா கடற்கரை, ராயபுரம், சென்னை சென்டிரல், எழும்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

ஏற்கனவே, பெய்த மழையால் சென்னை வில்லிவாக்கம் பாபாநகர், ராஜமங்கலம் போன்ற பகுதிகளில் மழைவெள்ளம் தேங்கி உள்ளது. சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் தேங்கி நிற்கிறது. 

மழை வெள்ளத்தை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் பம்புகள் வைத்து அகற்றினாலும் முழுமையாக வடிய வைக்க முடியவில்லை.

பணி முடியாத நிலை
இதற்கு காரணம் அந்த பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகாலானது குறிப்பிட்ட ஒரு இடத்தில் பணி முடியாததால் இணைக்கப்படாமல் உள்ளது. இதனால்தான் தங்கள் பகுதியில் தண்ணீர் 
தேங்கி நிற்கிறது என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.எனவே, அந்த பகுதியில் உள்ள மழைநீரை வடியவைக்க மோட்டார் பம்புகளை வைத்து முயற்சிசெய்வதோடு, அந்த மழை நீர் வடிகாலை இணைப்பதன் மூலம் தண்ணீரை முற்றிலுமாக வெளியேற்றலாம். இனிமேலும் இது போன்று மழைநீர் தேங்காத வண்ணம் நிரந்தர தீர்வாகவும் அது அமையும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நோய்த்தொற்று பரவும் அபாயம்
திருவான்மியூர் பஸ் நிலையத்துக்குள்ளும் நேற்று வரை மழைநீர் வடியவில்லை. இதனால், பயணிகள் பஸ் நிலையத்துக்கு உள்ளே சென்று பஸ்சில் ஏறாமல் பஸ் நிலையத்துக்கு வெளியே பஸ் வரும்போது ஏறிச்செல்லும் பரிதாபத்தை பார்க்க முடிந்தது. இதேபோன்று, சென்னையில் உள்ள ஒரு சில தாழ்வான பகுதிகளில், மழை நின்றபிறகும், தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதிகளில் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அந்தந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Next Story