டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 6 Dec 2020 6:27 AM IST (Updated: 6 Dec 2020 6:27 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கரூரில் தி.மு.க.வினர் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கருர்,

புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கரூர் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க.வினர் ஏர்கலப்பையுடனும், நெற்பயிருடனும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி கரூர் மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி பேசியதாவது:-

விவசாய பொருட்களை எவ்வளவுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தான் தீர்மானிக்க வேண்டும். அரசாங்கம் தீர்மானிக்க கூடாது. அதே போன்று யாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பதை விவசாயிதான் தீர்மானிக்க வேண்டும். கார்பரேட் கம்பெனிகள் தீர்மானிக்க கூடாது. விவசாயிகளுக்கு நலம் பயக்கும் அரசாங்கமாக தி.மு.க. இருந்தது.

இலவச மின்சாரம்

தி.மு.க. ஆட்சியில் ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது தமிழக அரசு எத்தனை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி உள்ளது. தற்போது தட்கல் முறையில் அதாவது ரூ.3 லட்சம், ரூ. 5 லட்சம், ரூ.7 லட்சம் என பணம் கட்டினால் தான் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. மின்சார உற்பத்தியில் மின் மிகை மாநிலம் என்று கூறுபவர்கள், தமிழக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க வேண்டியது தானே.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உண்மையான விவசாயி என்றால் வாழ்வாதாரம் இழந்த விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் தானே. ஏன் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார். விவசாயிகளுக்கு எதிரான அரசு நடைபெற்று வருகிறது. வரும் தேர்தல் மக்களை மட்டும் அல்ல படித்தவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் காப்பாற்றக்கூடிய தேர்தல். எனவே விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வாழ்வாதாரம் மேம்பட தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும். கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்றோர்

ஆர்ப்பாட்டத்தில் விவசாய அணி செயலாளர் சின்னசாமி, நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், குளித்தலை எம்.எல்.ஏ. ராமர், நெசவாளர் அணி செயலாளர் பரணி மணி மற்றும் ஒன்றிய, நகர, கிளை கழக செயலாளர்கள் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

Next Story