புளியரையில் பா.ஜனதாவினர் வந்த ஜீப்பில் பேனர் கிழிப்பு: தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு

புளியரையில் பா.ஜனதாவினர் வந்த ஜீப்பில் பேனரை கிழித்தது தொடர்பாக தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பா.ஜனதா பிரசார ஜீப்
கேரள மாநிலத்தில் வருகிற 8-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதேபோன்று பா.ஜனதாவைச் சேர்ந்த சிலர் ஒரு ஜீப்பில் நேற்று செங்கோட்டை அருகே கேரள மாநில எல்லையான அச்சன்கோவிலில் பிரசாரம் செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் செங்கோட்டை அருகே புளியரை வழியாக கேரளாவிற்கு சென்று கொண்டிருந்தனர். புளியரை பி.வி.டி. மில் அருகே ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கோட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் (வயது 35) சிவகிரியில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் தனது கட்சி நிர்வாகிகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பா.ஜனதாவினர் சென்ற ஜீப், ரவிசங்கரின் காரை முந்திச் சென்றது.
7 பேர் மீது வழக்கு
தொடர்ந்து பா.ஜனதாவினரின் ஜீப்பை முந்துவதற்கு ரவிசங்கரின் கார் டிரைவர் முயன்றார். ஆனால் பா.ஜனதாவினரின் ஜீப் வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவிசங்கர் தரப்பினர், பா.ஜனதாவினரின் ஜீப்பை வழிமறித்து, அதில் இருந்த பேனரை கிழித்ததாகவும், ஜீப் டிரைவரான கேரள மாநிலம் எடப்பாளையத்தை சேர்ந்த சந்தோசை அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், புளியரை போலீசார் ரவிசங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்களான கேசவ புரத்தைச் சேர்ந்த மற்றொரு சந்தோஷ், கற்குடியை சேர்ந்த சுரேஷ், தெற்குமேட்டை சேர்ந்த முருகன் மற்றும் புளியரையை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே பா.ஜனதாவின் பிரசார வாகனத்தை சேதப்படுத்திய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் பா.ஜனதாவினர் இரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story