மதுரை பாலரெங்காபுரத்தில் அதிநவீன கருவிகளுடன் மண்டல புற்று நோய் மையம் பயன்பாட்டுக்கு வந்தது; அரசு ஆஸ்பத்திரி டீன் தகவல்


மதுரை மண்டல புற்று நோய் மையத்தில் நிறுவப்பட்டுள்ள ரூ. 15 கோடி மதிப்பிலான லீனியா் ஆக்ஸிலரேட்டா் கருவி
x
மதுரை மண்டல புற்று நோய் மையத்தில் நிறுவப்பட்டுள்ள ரூ. 15 கோடி மதிப்பிலான லீனியா் ஆக்ஸிலரேட்டா் கருவி
தினத்தந்தி 6 Dec 2020 7:38 AM IST (Updated: 6 Dec 2020 7:38 AM IST)
t-max-icont-min-icon

ரூ.30 கோடி செலவில் அதிநவீன கருவிகளுடன் பாலரெங்காபுரத்தில் அமைக்கப்பட்ட மண்டல புற்று நோய் மையம் பயன்பாட்டுக்கு வந்ததாக அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி கூறினார்.

மண்டல புற்று நோய் மையம்
மதுரை அரசு மருத்துவமனையின் பிரிவான பாலரெங்காபுரம் மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுதுறையின் மூலமாக மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் கீழ் மண்டல புற்று நோய் மையம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருந்தது. இந்தநிலையில் மதுரை வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த மண்டல புற்று நோய் மையத்தை திறந்து வைத்தார்.

ரூ.30 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த மண்டல புற்று நோய் மையத்தில் உலக தரம் வாய்ந்த அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை மதுரை அரசு மருத்துவமனையின் கதிர்வீச்சு துறை மூலமாக அளிக்கப்பட உள்ளது. இதற்காக விலை உயர்ந்த உலகத்தரம் வாய்ந்த கதிர்வீச்சு சிகிச்சை கருவிகளும் நிறுவப்பட்டுள்ளன. இந்த கருவிகள் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் வழியாக வழங்கப்பட்டுள்ளது. அனைத்து புற்று நோயாளிகளுக்கும் சிறப்பான சிகிச்சை முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இலவசமாக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை கருவிகளின் சிறப்பம்சங்கள் குறித்து டீன் சங்குமணி கூறியதாவது:-

தென்தமிழகத்தில் முதல் முறை
மதுரை அரசு மருத்துவமனையின் ஒரு பிரிவான பாலரெங்காபுரம் மருத்துவமனை வளாகத்தில் மண்டல புற்று நோய் மையம் நோயாளிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு நிறுவப்பட்டுள்ள ‘லீனியர் ஆக்சிலரேட்டர்‘ கருவியானது தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கருவியில் கதிர்வீச்சு நவீன சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தின் வாயிலாக புற்றுநோய் கட்டிகளை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். இதனால் நோயாளிகளுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் வெகுவாக கட்டுப்படுத்தப்படும். நோயாளிகள் எந்தவித பயமும் இல்லாமல் சிகிச்சை பெறலாம்.

அடுத்ததாக, ‘பிரேக்கி தெரபி‘ என்ற கருவியானது புற்றுநோய் உள்சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. இக்கருவியின் மூலமாக கர்ப்பவாய் புற்று நோய், மார்பக புற்றுநோய் மற்றும் வாய்ப்புற்றுநோய் போன்றவற்றை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். இதுபோல், ‘சி.டி. சிமுலேட்டர்‘ கருவியின் மூலம் புற்றுநோய் கட்டிகளை சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக மிக துல்லியமாக அதன் பாதிப்பு பகுதி, பரவி உள்ள பகுதிகள் ஆகியவற்றை கணினிகள் மூலம் பதிவு செய்து அந்த பதிவு செய்த படங்களை புற்றுநோய் சிகிச்சை கருவிகளுக்கு அனுப்பி விடும். இதன் மூலமாக மிக துல்லியமாக கட்டிகளை கதிர்வீச்சு சிகிச்சை மூலம் அழிக்க முடியும். இந்த 3 கருவிகளும் மதுரை மற்றும் தென் தமிழக மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். இதன் மூலம் ஏழை நோயாளிகள் பயன் அடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story