முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு: வெள்ளாளர் முன்னேற்ற சங்கத்தினர் 28 பேர் கைது; அ.தி.மு.க.வினர் போராட்டத்தால் பரபரப்பு
முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த வெள்ளாளர் முன்னேற்ற சங்கத்தினர் 28 பேரை போலீசார் கைது செய்தனர். அ.தி.மு.க.வினர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
28 பேர் கைது
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில் பட்டியல் இனத்தில் இடம் பெற்றுள்ள 7 பிரிவினரை தேவேந்திரகுல வேளாளர் என பெயரிட்டு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என அறிவித்தார்.
இதுகுறித்து நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழு பரிந்துரை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று விருதுநகரில் மாநில வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் இளைஞரணி செயலாளர் பந்தல்ராஜ் தலைமையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரித்தும், மறியலில் ஈடுபட்ட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம்
கைது செய்யப்பட்ட அனைவரும் விருதுநகர் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் அ.தி.மு.க.வினர் மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன் தலைமையில் அந்த திருமண மண்டபத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருடன் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. மண்டபத்தின் மீதும் கற்களும் வீசப்பட்டன.
உடனடியாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் காவலுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென வற்புறுத்தினர். இதனை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் உயர்அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து போராட்டம் நடத்திய அ.தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாலையில் விடுவிப்பு
இதனை தொடர்ந்து போலீசார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த வெள்ளாளர் முன்னேற்ற சங்கத்தினர் 28 பேரையும் வேனில் ஏற்றி அங்கிருந்து வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தினர்.
அதன்பின்னர் அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் முகமது நயினார், ஒன்றிய செயலாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்தநிலையில் கைது செய்யப்பட்ட வெள்ளாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்தவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story