நாகை மாவட்டத்தில் 4-வது நாளாக கன மழை: மல்லியனாற்றின் கரை உடைந்து 300 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின


நாகை மாவட்டத்தில் 4-வது நாளாக கன மழை: மல்லியனாற்றின் கரை உடைந்து 300 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
x
தினத்தந்தி 6 Dec 2020 3:11 AM GMT (Updated: 6 Dec 2020 3:11 AM GMT)

நாகை மாவட்டத்தில் 4-வது நாளாக கன மழை பெய்தது. இதனால் மல்லியனாற்றின் கரை உடைந்து 300 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் ‘புரெவி’ புயல் காரணமாக கடந்த 4 நாட்களாக தொடர்ந்து விடிய, விடிய கன மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. நாகை புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தத்தளித்தபடி சென்றனர்.

வேளாங்கண்ணி செபஸ்தியார் நகரில் மழைநீர் குளம்போல் தேங்கியது. தொடர்ந்து அங்குள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்த தண்ணீரை அந்த பகுதி பொதுமக்கள் வெளியேற்றினர். நாகையில் நேற்று கடல் சீற்றம் குறைந்து காணப்பட்டது. இருந்தும் எதிர்வரும் காலங்களில் புயல் உருவாக கூடும் என்பதால் மீன்வளத்துறையினர் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி கொடுக்கவில்லை. இதனால் நாகை மீனவர்கள் கடந்த 13 நாட்களுக்கும் மேலாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் தங்களது விசைப்படகு மற்றும் பைபர் படகுகளை கடுவையாற்று கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

சாலை மறியல்

நாகை அருகே மஞ்சகொல்லையில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்தது. இதை வெளியேற்றக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் புத்தூர் ரவுண்டானா அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சுற்றுச்சுவர் இடிந்தது

நாகையை அடுத்த நாகூரில் நேற்று முன்தினம் தர்கா குளத்தின் சுற்றுச்சுவரின் தென்கரை பகுதியில் உள்ள சாக்கடை சுவர் இடிந்தது. இதனால் தர்கா குளம் சுவர் ஒரு பக்கமாக உள்வாங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த தர்கா நிர்வாகிகளும், நாகை நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மண்ணை போட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை தர்கா குளத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தர்கா நிர்வாகிகள் மற்றும் நாகை நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக தடுப்புகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது

வேதாரண்யம் பகுதியில் நேற்று அதிகாலை முதல் கடலோர கிராமங்களில் 3 மணி நேரம் இடைவிடாது மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கின. வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரங்களில் மழைநீர் 3 அடி வரை தேங்கி நின்றது. ஆதனூர், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் 435 பேர் ஆங்காங்கே பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்மழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மழையின் காரணமாக கடைவீதிகளில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

ஆற்றின் கரை உடைப்பு

திருமருகல் ஒன்றியத்திலுள்ள முடிகொண்டான் ஆறு, பிராவடையான் ஆறு, திருமலைராஜன் ஆறு, வளப்பாறு, புத்தாறு உள்ளிட்ட ஆறுகளில் தொடர் மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கோபுராஜபுரம் அருகே உள்ள பிராவடையான் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கோபுராஜபுரம், குத்தாலம், பனங்குடி, திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி அடைத்தனர்.

நாகை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மற்றும் கோபுராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி ரமேஷ், ஆகியோர் தலைமையில் கரையை அடைக்கும் பணி நடைபெற்றது. ஆற்றின் கரையை அடைக்கும் பணிகளை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் பி.வி.ராஜன், உதவி செயற்பொறியாளர் லதா மகேஷ்வரி, உதவி பொறியாளர்கள் செல்வபாரதி, செல்வகுமார், திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருஷ்ணன், நரிமணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் எம். பக்கிரிசாமி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

300 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

தலைஞாயிறு ஒன்றியம் வாட்டாகுடி ஊராட்சி மல்லியனாறு தெற்கு கரையில் நேற்று காலை உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் வாட்டாகுடி, உம்பளச்சேரி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 300 ஏக்கர் வயல்களில் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கின. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட கண்காணிப்பாளர் அம்பிகாபதி, ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம், துணை சூப்பிரண்டு மகாதேவன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சண்முகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் பொதுப்பணித்துறை ஊழியர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பை அடைத்தனர்.

மழை அளவு

நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணிமுதல் நேற்று காலை 8.30 வரை பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

நாகப்பட்டினம் 158., தரங்கம்பாடி 128, சீர்காழி 124, திருப்பூண்டி 110, கொள்ளிடம் 99, தலைஞாயிறு 88., மயிலாடுதுறை 82., மணல்மேடு77, வேதாரண்யம் 70 என பதிவாகியுள்ளது.

Next Story