வட்ட வழங்கல் அலுவலகங்கள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம்: அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கொண்டை கடலை வழங்க வேண்டும்


வட்ட வழங்கல் அலுவலகங்கள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம்: அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கொண்டை கடலை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Dec 2020 6:06 AM GMT (Updated: 6 Dec 2020 6:06 AM GMT)

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கொண்டை கடலை வழங்க வலியுறுத்தி நாளை வட்ட வழங்கல் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருங்கல்,

தமிழகத்தில் தற்போது பொது வினியோக திட்டத்தின் கீழ், முன்னுரிமை உள்ள ரேஷன் கார்டு தாரர்கள் (பி.எச்.எச்.) அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஒய்) கார்டு தாரர்கள், முன்னுரிமை இல்லாத கார்டுதாரர்கள் (என்.பி.எச்.எச்.), முன்னுரிமை இல்லாத சர்க்கரை கார்டுதாரர்கள் (என்.பி.எச்.எச்.-எஸ்), எந்த பொருளும் வேண்டாதோர் (என்.பி.எச்.எச்.- என்.சி.) என 5 விதமான குறியீடுகள் கொண்ட மின்னணு குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளது.

இந்தநிலையில் கொரோனா பாதிப்பால், வறுமை கோட்டுக்கு கீழுள்ள மற்றும் முன்னுரிமை குடும்பங்களுக்கு கொண்டை கடலை நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பி.எச்.எச்., ஏ.ஏ.ஒய். கார்டு தாரர்களுக்கு கொண்டைக்கடலை வழங்க, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரி கூறுகிறார். அதைத்தொடர்ந்து பி.எச்.எச்., ஏ.ஏ.ஒய். கார்டு தாரர்களுக்கு கடந்த ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மாதத்துக்கு ஒரு கிலோ வீதம் 5 கிலோ கொண்டை கடலை கடந்த 1-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது.

அனைவருக்கும் வழங்க வேண்டும்

குமரி மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளது. அதில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 867 பேர் ஏ.ஏ.ஒய். மற்றும் பி.எச். எச். குறியீடுகளை கொண்டவையாகும். ஆனால் குமரி மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் என்.பி.எச்.எச். குறியீடுகள் கொண்ட குடும்ப அட்டைகள் ஏழை மக்களிடம் தான் அதிக அளவில் உள்ளது. இதனால் ஏராளமான கூலி வேலைக்கு செல்லும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். தற்போது கொரோனா ஊரடங்கால் பலர் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

என்.பி.எச்.எச். குறியீடுகள் கொண்ட குடும்ப அட்டைகளை மறு ஆய்வு செய்து ஏழை மக்களுக்கு பி.எச்.எச். குறியீடுகள் கொண்ட குடும்ப அட்டை வழங்க கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளது. மேலும் தற்போது கொண்டை கடலை வழங்குவதை பார்க்கும் போது மக்களை பிரித்து வைத்து உணவு பொருள் வழங்கும் முறையை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

ஆர்ப்பாட்டம்

ஆகவே தமிழக அரசு அனைத்து என்.பி.எச்.எச். ரேஷன் கார்டு தாரர்களுக்கும், பாகுபாடு பார்க்காமல் 5 கிலோ கொண்டை கடலை வழங்க உடனடியாக தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கிள்ளியூர், விளவங்கோடு, கல்குளம், திருவட்டார் ஆகிய தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும்.

கிள்ளியூர் தாலுகா வட்டவழங்கல் அலுவலகத்தில் எனது (ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.) தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும். கல்குளம் தாலுகா வட்டவழங்கல் அலுவலகத்தில் பிரின்ஸ் எம். எல்.ஏ. தலைமையிலும், திருவட்டார், விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலங்களில் நடை பெறும் உள்ளிருப்பு போராட்டத்தில் அந்தந்த வட்டார நகர தலைவர்கள் தலைமையில் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story