பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து சப்- கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
25 ஆண்டு கால போராட்டம்
தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணை 6 ஆயிரத்து 400 ஏக்கர் நேரடி பாசனமும், மறைமுகமாக 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணைக்கு பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் மூலம் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 25 ஆண்டு காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டு காலமாக தொடர் போராட்டங்கள் நடத்தியதன் காரணமாக மண்டலம் முறைக்காக பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் கீழ் ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது வட கிழக்கு மற்றும் தென் கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையிலே ஆயக்கட்டு பகுதியில் நீர் தேவை குறைவாக இருக்கும் என கருத்தில் கொண்டு 1994-ம் ஆண்டு ஆணைப்படி உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கும் வேண்டும் என்ற அரசாணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை.
ஆர்ப்பாட்டம்
இதன் தொடர்ச்சியாக காத்திருப்புப்போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் ஆடு, மாடுகளுடன் போராட்டம் மற்றும் அணையை முற்றுகையிடும் போராட்டம் என தொடர்ச்சியாக 5 கட்டங்களாக போராட்டம் நடத்தியும் 5 முறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. இறுதியாக நேற்று சப்-கலெக்டர் பவன்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க முடியாது என்று பேச்சுவார்த்தையில் கூறினார்கள். பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story