சேர்வராயன் மலை பகுதியில் மழை: வாணியாறு அணை நிரம்பியது


சேர்வராயன் மலை பகுதியில் மழை: வாணியாறு அணை நிரம்பியது
x
தினத்தந்தி 6 Dec 2020 4:30 PM IST (Updated: 6 Dec 2020 4:20 PM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டி, சேர்வராயன் மலை பகுதியில் பெய்த மழையின் காரணமாக வாணியாறு அணை நிரம்பியது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 220 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பொம்மிடி,

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு அணை உள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 65 அடி ஆகும். பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சேர்வராயன் மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று வாணியாறு அணைக்கு வினாடிக்கு 220 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதன் காரணமாக அணை 63 அடியை எட்டி நிரம்பியது.

எனவே பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் 220 கனஅடி தண்ணீரும் அப்படியே 3 மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இந்த தண்ணீர் வாணியாற்றின் வழியாக வெங்கடசமுத்திரம் ஏரி, ஆலாபுரம் ஏரி, பறையபட்டி ஏரிகளுக்கு செல்கிறது. வாணியாறு கால்வாய் தூர்வாரும் பணி ரூ.16 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைந்து முடித்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பாப்பிரெட்டிப்பட்டி, சேர்வராயன் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக வாணியாறு அணை நிரம்பியது. தற்போது அணையின் நீர்மட்டம் 63 அடியாக உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக வினாடிக்கு 220 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வாணியாறு அணையின் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணி முடிவடைந்ததும் வாணியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டாரத்தில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என்று தெரிவித்தனர். அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story