மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் அடித்தட்டு மக்களுக்கு எதிரானது மேட்டுப்பாளையம் ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு


மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் அடித்தட்டு மக்களுக்கு எதிரானது மேட்டுப்பாளையம் ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 6 Dec 2020 9:30 PM IST (Updated: 6 Dec 2020 9:28 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் அடித்தட்டு மக்களுக்கு எதிரானது என்று மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

மேட்டுப்பாளையம்,

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. நீலகிரி மாவட்டத்தில் முடித்தார். அவர், நேற்றுமுன்தினம் இரவு மேட்டுப்பாளையத்தில் தங்கினார். இதையடுத்து நேற்று காலை மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் கனிமொழி எம்.பி. பிரசாரத்தை தொடங்கினார். அவருக்கு ஊட்டி -கோத்தகிரி சாலை சந்திப்பு ஓடந்துறையில் நகர, ஒன்றிய தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. தலைமையில் ஓடந்துறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கருப்புக்கொடி ஏந்தி, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அதைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தன்னை விவசாயி என்று கூறிக் கொள்ளும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு அரியானா, பஞ்சாப் உள்பட நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. விவசாயிகளை அழைத்து பேசாமல் தனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதால் அந்த சட்டங்களை மத்திய பாரதீய ஜனதா அரசு நிறைவேற்றி உள்ளது. வேளாண் சட்டங்கள் மூலம் இடைத்தரகர்களை ஒழிப்பதாக மத்திய அரசு கூறியது. ஆனால் பெரிய பெரிய இடைத்தரகர்களுக்கு உதவி செய்யத்தான் வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல விவசாயிகளுக்கும் அ.தி.மு.க. அரசு துரோகம் செய்து விட்டது.

வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளை நேரிடையாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய - மாநில அரசுகள் அடகு வைத்து விட்டன. இந்த சட்டத்தால் விவசாயிகள் என்ன பயிர் செய்ய வேண்டும் என்பதை கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் முடிவு செய்யும். அவர்கள் தான் விலையையும் நிர்ணயம் செய்ய முடியும். இதனால் விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்க போவதில்லை. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் அடித்தட்டு மக்களுக்கு எதிரான சட்டம் ஆகும்.

விவசாயிகளுக்கு எதிரான சட்டம் மூலம் மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிட்டு வருகிறது. அதை தட்டிக் கேட்கும் நிலையில் அ.தி.மு.க. அரசு இல்லை. டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்து பேசாமல் இருக்கிறது. விவசாயிகளுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் நீதி கிடைக்கும் வரை தி.மு.க.வின் போராட்டங்கள் தொடரும். இன்னும் 5 மாத காலம் தான் உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மு.க.ஸ்டாலின் முதல் -அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அடித்தட்டு மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாடு அடைய பாடுபடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின்னர் கனிமொழி எம்.பி. மேட்டுப்பாளையம் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

Next Story