விவசாயிகள் முழுஅடைப்பு போராட்டத்துக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆதரவு


விவசாயிகள் முழுஅடைப்பு போராட்டத்துக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆதரவு
x
தினத்தந்தி 7 Dec 2020 6:03 AM IST (Updated: 7 Dec 2020 6:03 AM IST)
t-max-icont-min-icon

நாளை நடைபெற உள்ள விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்து உள்ளது.

மும்பை, 

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் புதுடெல்லியை முற்றுகையிட்டு கடந்த 11 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரமடைந்துவரும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. இந்தநிலையில் விவசாய சங்கங்கள் தங்களது கொரிக்கையை வென்றெடுப்பதற்காக நாளை(திங்கட்கிழமை) நாடு தழுவிய முழு அடைப்புக்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுத்துள்ளது.

விவசாயிகளின் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு மராட்டியத்தில் ஆளும் மகாவிகாஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இதுகுறித்து சிவசேனா கட்சியன் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அனில் தேசாய் கூறுகையில், “விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான மத்திய அரசின் வேளாண் சட்டங்களை சிவசேனா தலைவரும், முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே எதிர்க்கிறார். எனவே நாங்கள் பாரத் பந்திற்கு ஆதரவு கொடுக்கிறோம்” என்றார்.

முன்னதாக அகாலி தள கட்சி தலைவர் பிரேம் சிங் சந்துமஜ்ரா விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு மும்பையில் உள்ள வர்ஷா பங்களாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். பின்னர் அவர், கல்வி, வேளாண்மை, சட்டம்- ஒழுங்கு போன்ற விவகாரங்களில் மத்திய அரசு, மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை உத்தவ் தாக்கரேயும் ஒப்புக்கொண்டார், என்றார்.

இதேபோல தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் இந்த போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது.

விவசாய அமைப்புகளுடன், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. எனவே விவசாய சங்கங்கள் 8-ந் தேதி அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய முழு அடைப்புக்கு மராட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story