வளர்ச்சி பெற துடிக்கும் மாவட்டமாக விருதுநகரை தேர்வு செய்த மத்திய அரசு திட்ட பணிகளை நிறைவேற்றாதது ஏன்?


விருதுநகர் மாவட்டம்
x
விருதுநகர் மாவட்டம்
தினத்தந்தி 7 Dec 2020 6:55 AM IST (Updated: 7 Dec 2020 6:55 AM IST)
t-max-icont-min-icon

வளர்ச்சிக்கான மாவட்டம் என மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் திட்டப்பணிகள் முறையாக நடைபெறாததால் உறுதியளிக்கப்பட்ட படி அடுத்த ஆண்டிற்குள் இந்த மாவட்டம் முன்னேறிய மாவட்டமாக உருவாக வாய்ப்பில்லாத நிலையே நீடிக்கிறது.

தேர்வு
கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு நாடு முழுவதும் 105 மாவட்டங்களை வளர்ச்சிக்கான மாவட்டங்களாக தேர்வு செய்து அடுத்த 3 ஆண்டுகளில் இந்த மாவட்டங்கள் முழுமையாக வளர்ச்சி பெற்ற மாவட்டங்களாக உருவாக்கப்படும் என உறுதியளித்தது.

அந்த வகையில் தமிழகத்தில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. மாவட்டத்தில் நரிக்குடி, திருச்சுழி யூனியன் பகுதிகளில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைவு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பாடு இல்லாதது, தொடக்கக் கல்வித் தரம் குறைவு, ஆகிய மூன்று காரணங்களின் அடிப்படையில் இம்மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு இதற்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும் என இதற்காக மத்திய அரசின் இணை செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

திட்ட பணிகள்
தொடக்கத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதின் அடிப்படையில் அவரும் இருமுறை வேகமாக மாவட்டத்திற்கு வந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார். ஆனாலும் மத்திய அரசால் இம்மாவட்டத்திற்கு என கூடுதல் நிதி ஒதுக்கீடு ஏதும் செய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்து சென்றார்.

தொடர்ந்து இம்மாவட்டத்திற்கென நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரியும் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ளாமல் அதிகாரிகளை மட்டும் சந்தித்து புள்ளி விவரங்களை பெற்று கொண்டு செல்லும் நிலையே தொடர்ந்தது. இதனால் மாவட்டத்தில் மத்திய அரசு உறுதியளித்தபடி குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து மத்திய அரசின் நீர்வள மேம்பாட்டு திட்டமும் இம்மாவட்டத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் அதற்காக எந்தவித நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

முற்றிலும் முடக்கம்
இதனால் நீர் வளம் மேம்படவும் எந்தவித வாய்ப்பும் ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து இம்மாவட்டத்திற்கென நியமிக்கப்பட்டிருந்த மத்திய அரசின் கண்காணிப்பு அதிகாரியும் மாற்றப்பட்டார்.

ஆனால் இது பற்றிய தகவல் இந்த தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு கூட தெரிவிக்கப்படவில்லை. மாற்றப்பட்ட புதிய அதிகாரியான மத்திய அரசு இணைச்செயலாளர் உமா, மாவட்டத்திற்கு நேரடியாக வராமல் ஆன்லைன் மூலம் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் பணியை மட்டுமே மேற்கொண்டார். இதற்கிடையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மத்திய அரசின் மாவட்டத்தை வளர்ச்சி பெற்ற மாவட்டமாக உருவாக்கும் நடவடிக்கை முற்றிலுமாக முடங்கியது.

கோரிக்கை
இதற்கிடையில் இம்மாவட்டம் இரு முறை வளர்ச்சி பெற துடிக்கும் மாவட்டங்களில் சிறந்த மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகளும் வழங்கப்பட்டன.

மத்திய அரசால் எவ்வித திட்டங்களும் நிறைவேற்றப்படாத நிலையில் விருதுகளுக்கு மட்டும் எந்த அடிப்படையில் மத்திய அரசு தேர்வு செய்தது என்பது புரியவில்லை. எது எப்படி ஆயினும் வரவிருக்கும் ஆண்டிலாவது இம்மாவட்டத்தை வளர்ச்சி பெற்ற மாவட்டமாக உருவாக்க மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசின் திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

Next Story