ராமேசுவரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் ஆய்வு


ராமேசுவரம் நடராஜபுரம் பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை நேற்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு
x
ராமேசுவரம் நடராஜபுரம் பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை நேற்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு
தினத்தந்தி 7 Dec 2020 7:19 AM IST (Updated: 7 Dec 2020 7:19 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு
வங்கக்கடலில் உருவாகியிருந்த புரெவி புயல் காரணமாக ராமேசுவரம் பகுதியில் கடந்த 4 நாட்களாக இடைவிடாமல் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக ராமேசுவரம் நடராஜபுரம், கரையூர், இந்திரா நகர், அமிர்தபுரம் உள்ளிட்ட நகரின் பல தாழ்வான இடங்களில் உள்ள ஏராளமான வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

இந்தநிலையில் ராமேசுவரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராமேசுவரம் வந்தார்.

இதையொட்டி அவர் நடராஜபுரம், கரையூர் இந்திராநகர், அமிர்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீரை பார்வையிட்டார்.

நீரை வெளியேற்றும் பணி
மேலும் கடந்த 3 நாட்களாக தெற்கு கரையில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தனுஷ்கோடி பகுதியை சேர்ந்த மீனவ மக்களையும் கலெக்டர் சந்தித்து பேசினார். அப்போது நடராஜபுரம் பகுதியில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து தேங்கி நிற்காமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக கலெக்டர் கூறுகையில், ராமேசுவரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை நீரை நகராட்சி சார்பில் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியானது கடந்த மூன்று நாட்களாகவே நடைபெற்று வருகின்றது.

மழை ஓய்ந்ததை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுக புத்ரா, நகராட்சி ஆணையாளர் ராமர், தாசில்தார்கள் தியாகராஜன், அப்துல் ஜபார், மீன்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story