கன்னியாகுமரியில் புயலால் நிறுத்தப்பட்ட படகு சேவை மீண்டும் தொடங்கியது 4 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் உற்சாகம்


கன்னியாகுமரியில் புயலால் நிறுத்தப்பட்ட படகு சேவை மீண்டும் தொடங்கியது 4 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் உற்சாகம்
x
தினத்தந்தி 7 Dec 2020 8:33 AM IST (Updated: 7 Dec 2020 8:33 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் புயலால் நிறுத்தப்பட்ட படகு சேவை மீண்டும் தொடங்கியது. 4 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

கன்னியாகுமரி,

கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து புகழ்பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு 8 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து கடந்த மாதம் 25-ந் தேதி முதல் கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டது.

ஆனால், குறைந்தளவு சுற்றுலா பயணிகள் வந்ததால் குகன், விவேகானந்தா ஆகிய 2 படகுகள் மட்டுமே இயக்கப்பட்டன. புதிதாக வாங்கப்பட்ட தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய அதிநவீன சொகுசு படகுகள் இதுவரை இயக்கப்படவில்லை.

புயல் எச்சரிக்கையால் நிறுத்தம்

இந்த நிலையில் ‘புரெவி’ புயல் எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரிக்கு செல்ல கடந்த 2-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அத்துடன் படகு சேவையும் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நேற்றுமுன்தினம் முதல் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் வர தொடங்கினர். அவர்கள் முக்கடல் சங்கமம் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். படகு போக்குவரத்து இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மீண்டும் தொடங்கியது

4 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதற்காக நேற்று காலை 7.45 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியது. 8 மணி முதல் படகுகள் இயக்கப்பட்டன. மீண்டும் படகு சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். படகில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டனர். மேலும் புயல் எச்சரிக்கை காரணமாக அடைக்கப்பட்டிருந்த கடைகளும் திறக்கப்பட்டன.

Next Story