போலீஸ் விசாரணையில் அதிரடி திருப்பம்: தபால் அதிகாரியை கொன்றதாக மகன் கைது


போலீஸ் விசாரணையில் அதிரடி திருப்பம்: தபால் அதிகாரியை கொன்றதாக மகன் கைது
x
தினத்தந்தி 7 Dec 2020 8:56 AM IST (Updated: 7 Dec 2020 8:56 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் விசாரணையில் அதிரடி திருப்பமாக தபால் அதிகாரியை கொன்றதாக மகன் கைது செய்யப்பட்டார். பங்கு வர்த்தகத்தில் பணத்தை இழந்ததால் கொள்ளை நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

உடுமலை,

திருப்பூர் மாவட்டம் உடுமலை ராமசாமி நகரை சேர்ந்தவர் ராஜன் (வயது 57). இவர் உடுமலையை அடுத்துள்ள புங்கமுத்தூரில் உள்ள தபால் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெயந்தி (56). இவர் உடுமலை சதாசிவம் வீதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன்கள் பிரதீப் (27), பிரவீன்(25).

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 17-ந்தேதி இவர்களது வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதைப்பார்த்ததும் அக்கம், பக்கத்தினர் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

உடனே தீயணைப்பு படை வீரர்கள் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்தனர். அப்போது வீட்டில் இருந்த கட்டில், மெத்தை, நாற்காலிகள் தீயில் எரிந்து கொண்டிருந்தன. உடனே தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

சாவு

அப்போது வீட்டினுள் ராஜன், ஜெயந்தி, பிரதீப், பிரவீன் ஆகியோர் மயங்கி கிடந்தனர். அவர்கள் 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ராஜனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். ராஜனின் காலில் லேசான தீக்காயம் மட்டுமே இருந்ததால் புகையால் அவர், மூச்சுத்திணறி இறந்துள்ளது தெரியவந்தது. மற்ற 3 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இந்த சம்பவம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பலகோணங்களில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இந்த சம்பவத்திற்கு ராஜனின் மகன் பிரதீப்தான் காரணம் என திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. பிரதீப் தீ விபத்து மற்றும் மீட்பு பணிகள் குறித்து படித்துள்ளார். அவர் ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கியுள்ளார். இந்த பங்கு வர்த்தகத்தில் அவர் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. அதனால், தான் கடன் வாங்கியவர்களுக்கு கடனை திருப்பி அடைக்க முடியவில்லை. இதனால் கடனை அடைக்க பல்வேறு விதமாக யோசித்துள்ளார்.

நாடகம் அரங்கேற்றம்

அப்போதுதான் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று விட்டார்கள் என கடன்காரர்கள் நம்பி விட்டால், அதன்பின்னர் கடனை கேட்க மாட்டார்கள் என்றும், அதன்பின்னர் கடனை திருப்பி கொடுக்காமல் தப்பி விடலாம் என்றும் நினைத்துள்ளார். அதற்காக வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து தீ வைத்து விட்டு பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டதாக சித்தரித்து ஒரு நாடகத்தை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளார்.

அதற்காக சம்பவத்தன்று இரவு தாயார், தந்தை, தம்பி ஆகியோருக்கு மோரில் தூக்க மாத்திரையை கலந்து, அதை கொரோனா வைரஸ் தொற்று எதிர்ப்பு சக்தி மாத்திரை என்று சொல்லி கொடுத்துள்ளார்.

மகன் கைது

அதை உண்மை என்று நம்பி வாங்கி குடித்த 3 பேரும் தூங்கி விட்டனர். பின்னர் பிரதீப் வீட்டில் உள்ள கட்டில் மெத்தை, ஹாலில் இருந்த நாற்காலிகள் ஆகியவற்றிற்கு தீ வைத்துள்ளார். பின்னர் தானும் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு படுத்துக்கொண்டுள்ளார். அப்போது வீட்டில் உண்டான புகை மூட்டத்தால் ராஜன் மூச்சுத்திணறி இறந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கொலை, கொலைமுயற்சி, தடயங்களை திட்டமிட்டு அழித்தல் ஆகிய வழக்காக பதிவு செய்து பிரதீப்பை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரதீப் உடுமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோர்ட்டு உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Next Story