சவுதி அரேபியாவுக்கு செல்ல பணஉதவி செய்து போதை பொருள் கடத்தலில் டிரைவரை சிக்க வைத்த நண்பர்கள் போலீஸ் வலைவீச்சு


சவுதி அரேபியாவுக்கு செல்ல பணஉதவி செய்து போதை பொருள் கடத்தலில் டிரைவரை சிக்க வைத்த நண்பர்கள் போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Dec 2020 9:53 AM IST (Updated: 7 Dec 2020 9:53 AM IST)
t-max-icont-min-icon

சவுதி அரேபியா செல்ல பண உதவி செய்து போதை பொருள் கடத்தலில் டிரைவரை சிக்க வைத்த நண்பர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை,

கோவை விமானநிலையத்தில் இருந்து சார்ஜா செல்வதற்காக நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம் துவாக்குடி பெரியார்நகரை சேர்ந்த நாகரத்தினம் (வயது 40) என்பவர் வந்தார். அங்கு மத்திய தொழில்பாதுகாப்பு படை அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனைசெய்து கொண்டு இருந்தனர்.

அப்போது நாகரத்தினம் தான் கையில் வைத்து இருந்த சிறிய காலி சூட்கேசுடன் நேராக அதிகாரிகளிடம் சென்று தனது நண்பர்களான அலிபாய் (46), அருள் (40) ஆகியோர் தன்னிடம் இந்த சூட்கேசை கொடுத்து சார்ஜா கொண்டு செல். நாங்கள் 2 நாட்கள் கழித்து சார்ஜா வந்து வாங்கிக்கொள்கிறோம் என்று கூறி கொடுத்தனர். ஆனால் இதில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியாது. சூட்கேசின் எடையில் மாற்றம் இருந்ததால் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று உங்களிடம் வந்து கொடுக்கிறேன் என்றார். அந்த சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதற்கு அடியில் இரண்டு பாலித்தீன் கவர்களில் மறைத்து வைத்து இருந்த 2 கிலோ 200 கிராம் எடை கொண்ட மெத்தா பீட்டமைன் என்ற போதை பொருள் இருந்ததும், அதன் மதிப்பு ரூ.7 கோடி இருக்கலாம் என்பதும் தெரியவந்தது.

2 பேருக்கு வலைவீச்சு

இதையடுத்து ராஜரத்தினத்திடம் அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தினர். மேலும் அவர் கூறியதுபோன்று விமானநிலையத்தில் சூட்கேசை கொடுத்தது யார்? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ராஜரத்தினத்திடம் அலிபாய், அருள் ஆகியோர் வந்து பேசுவதும், பின்னர் ஒரு சூட்கேசை கொடுத்துவிட்டு வேகமாக அங்கு இருந்து தப்பி சென்றதும் தெரிந்தது. பின்னர் ராஜரத்தினத்தை அதிகாரிகள் பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். இது போதை பொருள் கடத்தல் வழக்கு என்பதால் கணபதியில் உள்ள போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இந்த வழக்கை பீளமேடு போலீசார் மாற்றி அனுப்பிவைத்தனர். அதன்பேரில் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அலிபாய், அருள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ராஜரத்தினம் கூறியதாவது:-

உதவுவது போல் நடித்து...

எனக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். நான் சவுதி அரேபியாவில் டிரைவராக வேலை பார்த்து வந்தேன். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருச்சியில் எனது மனைவி மற்றும் குழந்தை ஒரு விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அவர்களை கவனிப்பதற்காக நான் சொந்த ஊர் திரும்பினேன்.

பின்னர் கொரோனா தொற்று காரணமாக விமானபோக்குவரத்து இல்லாததால் சவுதி அரேபியா செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தேன். மேலும் கடந்த 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டேன். ஆனால் பணம் இன்றி மிகவும் சிரமப்பட்டேன். அப்போது எனது நண்பர்களான அலிபாய், அருள் ஆகியோரிடம் பண உதவி கேட்டேன். அவர்கள் நான் சவுதி அரேபியா செல்ல உதவி செய்தனர். மேலும் அவர்கள் விமானநிலையத்துக்கு என்னுடன் கோவை வந்தனர். பின்னர் நான் விமானம் ஏற செல்வதற்கு முன்பு என்னிடம் சூட்கேசை கொடுத்து சவுதி அரேபியாவில் 2 நாட்கள் கழித்து வந்து வாங்கிக்கொள்கிறோம் என்று கூறினர். ஆனால் காலி சூட்கேசை கொடுத்ததால் சந்தேகம் ஏற்பட்டது. அதை அவர்களிடம் கொடுக்கலாம் என்று நினைத்த போது அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் தான் உங்களிடம் வந்து புகார் செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் ராஜரத்தினத்துக்கு உதவுவது போல் நடித்து அவரை போதை பொருள் கடத்தலில் சிக்கவைத்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. தொடர்ந்து அலிபாய், அருள் ஆகியோர் பிடிபட்டால் தான் இந்த வழக்கில் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. மேலும் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் இதுபோன்று யாரேனும் பொருட்கள் மற்றும் உடைமைகளை கொண்டு செல்லக்கோரி கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று போலீசார் அறிவுரை வழங்கினர்.

Next Story