காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னாள் படைவீரர் நல கொடிநாள் நிதி வசூல் தொடக்கம்; பொதுமக்கள் தாமாக முன்வந்து வழங்க வேண்டுகோள்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்கள் முன்னாள் படைவீரர் நல கொடிநாள் நிதி வசூலை உண்டியலில் செலுத்தி தொடங்கி வைத்தனர்.
கொடிநாள் நிதி வசூல்
செங்கல்பட்டு மாவட்ட மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலகொடிநாள் நிதி வசூலை உண்டியலில் பணம் செலுத்தி மாவட்ட கலெக்டர் அ.ஜான் லூயிஸ் தொடங்கி வைத்தார்.
படைவீரர் கொடிநாள் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ந்தேதி நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டிற்காக பாடுபட்ட படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நல திட்டங்களுக்காக கொடிநாள் நிதி வசூல் பொதுமக்களிடமிருந்தும் அரசுத் துறை அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வாறு வசூல் செய்யப்பட்ட கொடிநாள் நிதிவசூல் தொகையினை கொண்டு போரில் வீர மரணம் அடைந்த, உடல் ஊனமுற்ற படை வீரர்களுக்கும், முன்னாள் படைவீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
முன்னாள் படைவீரர்களுக்கான கொடிநாள் நிதி வசூல் தொகையினை பொதுமக்கள் தாமாக முன்வந்து ‘‘ ARMED FORCES FLAG DAY FUND’ PAYABLE AT CHENNAI’’ என்ற பெயரில் வங்கி வரைவோலை மூலமாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கலாம். காசோலை அல்லது ரொக்கம் அனுப்புவதை தவிர்த்திட வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அ.ஜான் லூயிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலகொடிநாள் நிதி வசூலை உண்டியலில் பணம் செலுத்தி மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். அப்போது முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் சுப்புலட்சுமி உடன் இருந்தார்.
பிறகு மாவட்ட கலெக்டர் கூறியதாவது:;-
கடந்த 2019-ம் ஆண்டில் கொடிநாள் வசூலாக ரூ.1 கோடியே 25 லட்சம் இலக்கு தமிழக அரசால் நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை மிஞ்சி ரூ.2 கோடியே 41 லட்சத்து 56 ஆயிரத்து 600-ஐ வசூல் செய்தோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் கொடிநாள் நிதி வசூல் தொகையினை ‘‘ ARMED FORCES FLAG DAY FUND’ PAYABLE AT CHENNAI’’ என்ற பெயரில் வங்கி வரைவோலை மூலமாக பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரில் வழங்குதல் வேண்டும். காசோலை அல்லது ரொக்கம் அனுப்புவதை தவிர்த்திட வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story