திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் ஏரிகள், குளங்களை நிரப்பிய ‘புரெவி’ புயல் மழை


திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் ஏரிகள், குளங்களை நிரப்பிய ‘புரெவி’ புயல் மழை
x
தினத்தந்தி 8 Dec 2020 5:40 AM IST (Updated: 8 Dec 2020 5:40 AM IST)
t-max-icont-min-icon

புரெவி புயல் காரணமாக திருச்சி, பெரம்பலூர், அரியலுர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன.

திருச்சி,

வங்கக்கடலில், கடந்த மாதம் 27-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது ‘புரெவி‘ புயலாக உருவெடுத்தது. கடந்த 4-ந் தேதி பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்த்த வேளையில், அது வலுவிழந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழையாக பொழிந்து கொட்டி தீர்த்தது.

ஆண்டாண்டு காலமாக வடகிழக்கு பருவமழை பொய்த்துபோன திருச்சி மாவட்டத்தில் புரெவி புயலின் தாக்கத்தால் தினமும் மழை பெய்த வண்ணம் இருந்தது. அதிக மழை பெய்தது, தற்போது விவசாயிகளின் பயிர்களுக்கும் ஆபத்தாகத்தான் இருக்கிறது. மழையால் பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகி வருகிறது.

2,141 மில்லி மீட்டர் மழை பதிவு

கடந்த 1-ந் தேதி முதல் நேற்றுவரை (7-ந் தேதி) திருச்சி மாவட்டத்தில் 2,141 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. சராசரியாக எடுத்து கொண்டால் 85.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

அதன்படி, 1-ந் தேதி 29.2 மில்லி மீட்டர் அளவில் சாரல்போல மழை பெய்தது. 2-ந் தேதி மழை அளவு பதிவாகக்கூடிய நிலைக்கு மழை இல்லை. 3-ந் தேதி 540 மில்லி மீட்டர், 4-ந் தேதி 1,170 மில்லி மீட்டர், 5-ந் தேதி 139 மில்லி மீட்டர், 6-ந் தேதி 28.2 மில்லி மீட்டர், 7-ந் தேதி (நேற்று) அதிகாலை 234.1 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. ஆக ஒரு வாரத்தில் மட்டும் மொத்தமாக 2,141 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. சென்டி மீட்டர் அளவில் கணக்கிட்டால் 214 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

பெரம்பலூர்-அரியலூர்

இதேபோல் புரெவி புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பலத்த மழை பெய்தது. கடந்த 3-ந்தேதி மாவட்டத்தில் 406 மில்லி மீட்டர் மழையும், 4-ந்தேதி 745 மில்லி மீட்டர் மழையும், 5-ந்தேதி 336 மில்லி மீட்டர் மழையும் என மொத்தம் 1,487 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில் அரும்பாவூர் பெரிய ஏரி, அரும்பாவூர் சின்ன ஏரி, வடக்கலூர் ஏரி, கீரனூர் ஏரி, பெண்ணக்கோணம் ஏரி, வயலூர் ஏரி, கீழப்பெரம்பலூர் ஏரி, வடக்கலூர் அக்ரகாரம் ஏரி, அகரம்சீகூர் ஏரி ஆகிய 9 ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளன. 12 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளன. வேப்பந்தட்டை தாலுகா விசுவக்குடி அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கோரையாறு, மயிலூற்று அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. மாவட்டத்தில் பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3-ந்தேதி 151.2 மில்லி மீட்டர் மழையும், 4-ந்தேதி 375.8 மில்லி மீட்டர் மழையும், 5-ந்தேதி 101.8 மில்லி மீட்டர் மழையும் என மொத்தம் 628.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ‘புரெவி‘ புயலினால் பெய்த மழையின் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 69 ஏரிகளில் 31 ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளன. 21 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளன. சுத்தமல்லி, பொன்னேரி ஆகிய அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1,816 குளங்களில் 114 குளங்கள் முழுவதும் நிரம்பியுள்ளன.

புதுக்கோட்டை

‘புரெவி‘ புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகம் மழை பெய்தது. கடந்த 2-ந் தேதி முதல் நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மொத்தம் 3 ஆயிரத்து 359 மில்லி மீட்டர் ஆகும். மாவட்டத்தில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் தெற்கு வெள்ளாறு கோட்டத்தில் மொத்தம் 961 குளங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கஜா புயலை காட்டிலும் ‘புரெவி’ புயலில் மழை அதிகமாக பெய்ததால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகமானது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் 46 குளங்கள் முழுவதும் நிரம்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல மாவட்டத்தில் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 7 ஆயிரத்து 152 குளங்களில் 759 குளங்கள் முழுவதுமாக நிரம்பின. புதுக்கோட்டை நகராட்சியில் 32 குளங்களில் 2 குளங்கள் முழுவதுமாக நிரம்பின. மற்றவை 75 சதவீதம் நிரம்பி உள்ளன. அறந்தாங்கி நகராட்சி பகுதியில் 6 குளங்களில் ஒன்று முழுவதுமாக நிரம்பி விட்டன. மற்ற 5 குளங்களும் 75 சதவீதம் நீர் நிரம்பி உள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் 76 குளங்களில் 9 குளங்கள் முழுவதுமாக நிரம்பி உள்ளன. மற்ற குளங்களில் தண்ணீர் பரவலாக உள்ளது.

கரூர்

கரூர் மாவட்டத்தில் ‘புரெவி’ புயல் காரணமாக கடந்த 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை மிதமான மழை பெய்து வந்தது. இதில் கடந்த 3-ந்தேதி 166 மில்லி மீட்டர் மழையும், 4-ந்தேதி 238 மில்லி மீட்டர் மழையும், 5-ந்தேதி 92 மில்லிமீட்டர் மழையும், 6-ந்தேதி 3 மில்லி மீட்டர் மழையும், 7-ந்தேதி 106 மில்லி மீட்டர் மழையும் என மொத்தம் 605 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில் பெய்த மழையால் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 19 ஏரிகளிலும், ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் உள்ள 434 குளங்களிலும் ஓரளவு நீர் நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story