கார்வார் அருகே நடத்தையில் சந்தேகத்தில் பெண்ணை சுட்டுக்கொல்ல முயற்சி கணவர் கைது
கார்வார் அருகே, நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் பெண்ணை சுட்டுக்கொல்ல முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு,
உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் அருகே கோரா பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் தேசாய். தொழிலாளி. இவரது மனைவி ரஷிகா. இந்த தம்பதிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மதுகுடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த ரமேஷ் கடந்த சில மாதங்களாக வேலைக்கு எதுவும் செல்லாமல், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து ரஷிகாவிடம் தகராறு செய்து வந்து உள்ளார்.
மேலும் ரஷிகாவை, ரமேஷ் அடித்து உதைத்து வந்து உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே ரஷிகாவின் நடத்தையில் ரமேசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்களுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி வீட்டின் அருகே உள்ள வனப்பகுதியில் விறகு சேகரிக்க ரமேசும், ரஷிகாவும் சென்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக ரஷிகாவிடம் தகராறு செய்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ரஷிகாவை சுட்டார். இதில் ரஷிகாவின் வயிற்று பகுதியில் குண்டு துளைத்தது. இதனால் அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ், ரஷிகாவை மீட்டு சிகிச்சைக்காக கார்வார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். மேலும் கத்ரா போலீஸ் நிலையத்திற்கு சென்ற ரமேஷ் ஒரு புகார் அளித்தார். அதில் நானும், எனது மனைவி ரஷிகாவும் விறகு சேகரிக்க வனப்பகுதிக்குள் சென்றோம். அப்போது வனவிலங்கு வேட்டைக்காரர்கள் சுட்டதில் எனது மனைவியின் வயிற்றில் குண்டு பாய்ந்து விட்டது. அவரை துப்பாக்கியால் சுட்ட வேட்டைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே ரமேசின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது நடத்தையில் சந்தேகத்தால் ரஷிகாவை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்றதை ரமேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story