டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு எதிர்க்கட்சிகள், பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு
டெல்லியில் போராடும் விவசாயிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்து உள்ளனர். இதையொட்டி கர்நாடத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பெங்களூரு,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லியில் கடந்த 12 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் பகல்-இரவாக சாலையிலேயே அமர்ந்தும், படுத்தும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விவசாயிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதுவரை உடன்பாடு எட்டவில்லை.
இந்த நிலையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி நாடு தழுவிய அளவில் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்புக்கு டெல்லியில் போராடும் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து கர்நாடக விவசாய சங்கங்கள் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு வழங்கியுள்ளன. இந்த நிலையில் கர்நாடக விவசாய சங்கங்கள், கர்நாடகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் இதுபற்றி நிருபர்களிடம் கூறும்போது “விவசாயிகள் நாளை(அதாவது இன்று) முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவை அளிக்கிறது. இதையொட்டி மாவட்ட, தாலுகா தலைநகரங்களில் காங்கிரசார் போராட்டம் நடத்துவார்கள். பெங்களூருவில் விதானசவுதா முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்துவார்கள்.” என்றார்.
அதுபோல் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி கூறும்போது “விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஜனதா தளம் (எஸ்) கட்சி தனது முழு ஆதரவை அளிக்கிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மத்தி அரசு வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.
பல்வேறு விவசாய சங்கங் களை உள்ளடக்கிய கர்நாடக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் குருபூர் சாந்தகுமார் கூறுகையில், “விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும். இந்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முழு அடைப்புக்கு நாளை (இன்று) அழைப்பு விடுத்துள்ளனர். இதை நாங்கள் ஆதரிக்கிறோம். பெங்களூருவில் நாளை(இன்று) முழு அடைப்பு நடத்துகிறோம்.
மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து பெங்களூருவுக்கு வரும் அனைத்து சாலைகளையும் மறித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் பெங்களூருவில் அனைத்து சேவைகளும் முடங்கும். இந்த முழு அடைப்புக்கு கர்நாடக மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். விவசாய சங்கத்தினர் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்துவார்கள். இவ்வாறு குருபூர் சாந்தகுமார் கூறினார்.
விவசாயிகள் விடுத்துள்ள இந்த பெங்களூரு முழு அடைப்புக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு வழங்கியுள்ளனர். தெருவோர வியாபாரிகள் சங்கம், கர்நாடக லாரி உரிமையாளர்கள் சங்கம், தொழிலாளர் நல சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளன. அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் தார்மீக ஆதரவு வழங்குவதாகவும், அதே நேரத்தில் பஸ்களை எப்போதும் போல் இயக்குவதாகவும் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் ஆட்டோ-டாக்சி போன்றவை வழக்கம் போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story