சிவகாசி சட்டமன்ற தொகுதியில், ரூ.3 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை; அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 5 இடங்களில் ரூ.3 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார்.
தோரணவாயில்
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் அமைந்துள்ள நின்ற நாராயணபெருமாள் கோவிலுக்கு ரூ.10 லட்சம் செவலில் தோரணவாயில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது.
இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் ரூ.7 லட்சம் செலவில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
ரூ.2 கோடி
இதை தொடர்ந்து திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டிடம், திருத்தங்கல் சத்யா நகரில் உள்ள சிவகாசி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் ரூ.68 லட்சம் செலவில் அறிவியல் ஆய்வகம், நூலகம், கணினி அறை, கலை மற்றும் கைவினை அறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜைநடைபெற்றது.
மேலும் மாரனேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.2 கோடி செலவில் 6 வகுப்பறை கட்டிடங்கள், அறிவியல் ஆய்வகம், மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கழிப்பறை, சுற்றுச்சுவர் ஆகியவை அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
புதிய கட்டிடங்கள்
ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள புதிய கட்டிடங்களுக்கான பூமிபூஜை விழாவில் திருத்தங்கல் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாண்டிதாய், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பொன்சக்திவேல், விருதுநகர் மாவட்ட அறநிலையக் குழு தலைவர் பலராமன், ஒன்றிய செயலாளர்கள் வேண்டுராயபுரம் சுப்பிரமணி, கருப்பசாமி, ஒன்றிய கவுன்சிலர் வடமலாபுரம் ஆழ்வார்ராமானுஜம், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் விஸ்வநத்தம் ஆரோக்கியராஜ், திருத்தங்கல் நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் சரவணக்குமார், ரமணா, சேதுராமன், கிருஷ்ணமூர்த்தி, காளிராஜ், கோவில் பிள்ளை, ஆ.செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story