சிவகங்கை மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை; நீர்நிலைகள் வேகமாக நிரம்புகின்றன; விவசாயிகள் மகிழ்ச்சி
சிவகங்கை மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பலத்த மழை
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி மாவட்டங்கள் என்று சொல்வார்கள். இந்த 2 மாவட்டங்களிலும் பருவமழை நன்றாக பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்மாய்கள், ஊருணிகள், ஏரிகள், வரத்துக்கால்வாய்கள் குடிமராமத்து செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும் போதிய மழை இல்லாததால் கண்மாய்கள், ஊருணிகள் நிரம்பவில்லை.
நடப்பாண்டில் கடந்த ஜூலை மாதம் முதல் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் நிவர் புயல், புரெவி புயல் தொடர்ந்து வந்ததால் மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரத்திற்கும் மேல் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. நேற்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
நீர்நிலைகள் நிரம்புகின்றன
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. காரைக்குடி அதலைக்கண்மாய், செஞ்சை நாட்டார் கண்மாய், குடிக்காத்தான்பட்டி குடிக்காத்தான் கண்மாய், அரியக்குடி கண்மாய், பாதரக்குடி பெரிய கண்மாய், நங்கப்பட்டி நங்கை கண்மாய், திருச்சி-ராமேசுவரம் சாலையில் உள்ள வ.சூரக்குடியை அடுத்த இரட்டை கண்மாய் உள்ளிட்ட கண்மாய்கள் நிரம்பி மதகுகள் வழியாக தண்ணீர் மறுகால் செல்கிறது. மற்ற கண்மாய்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.
நீர்நிலைகள் நிரம்பி வருவதை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையை நம்பி பயிரிட்ட நெல் விவசாயிகள் தற்போது களை எடுத்தல், தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். பொதுப்பணித்துறையினர் கண்மாய்கள் பாதுகாப்பாக உள்ளனவா? என ஆய்வு செய்து வருகின்றனர்.
மணல் மூடைகள்
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விளாக்குளத்தில் உள்ள கண்மாயை நம்பி சுமார் 200 ஏக்கர் வரை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பலத்த மழை காரணமாக இந்த கண்மாய் நிரம்பிய நிலையில் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக கண்மாய் தடுப்பு சுவரையொட்டி மணல் மூடைகளை கொண்டு பலப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த பணியை யூனியன் தலைவர் லதாஅண்ணாத்துரை தலைமையில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சுந்தரமகாலிங்கம், அழகுமீனாள், ஒன்றிய கவுன்சிலர்கள் சுந்தரவள்ளி வேல்முருகன், அண்ணாத்துரை, ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனங்கள் சேதம்
கடந்த 5-ந்தேதி காரைக்குடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக வ.உ.சி. சாலை, முனியய்யா கோவில் தெருவை சேர்ந்த சலவை தொழிலாளி குமராயி என்பவரது ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அச்சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
தொடர் மழையால் சிவகங்கை முதலியார் தெருவில் இருந்த பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்தின் அருகில் உள்ள கடை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை அந்த பகுதியில் வழக்கமாக நிறுத்தி வைப்பார்கள். நேற்று 3 பேர் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி இருந்தனர். அந்த 3 இருசக்கர வாகனங்கள் மீதும் கட்டிடத்தின் சுவர் விழுந்து கிடந்தது. ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
நிவாரண உதவி
தமராக்கி மற்றும் குமாரபட்டி கிராமத்தில் சேதமடைந்த 6 வீடுகளின் உரிமையாளர்களுக்கு கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் அரசின் நிவாரண உதவியை வழங்கினார். அப்போது சிவகங்கை கோட்டாட்சியர் முத்துகழுவன், தாசில்தார் மைலாவதி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கருணாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story