திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின


திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின
x
தினத்தந்தி 8 Dec 2020 10:48 AM IST (Updated: 8 Dec 2020 10:48 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கின. இதையடுத்து கல்லூரிகளுக்கு வந்த மாணவிகள் தங்களின் தோழிகளுடன் செல்போன்களில் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

திண்டுக்கல்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கல்லூரிகளில் முதுநிலை இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் கடந்த 2-ந்தேதி தொடங்கின.

அதன் தொடர்ச்சியாக கலை-அறிவியல், என்ஜினீயரிங் மற்றும் வேளாண் கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகளும், அவர்களுக்கான தங்கும் விடுதிகளும் நேற்று முதல் திறக்கப்பட்டன.

உடல் வெப்ப பரிசோதனை

அதன்படி, திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரியில் நேற்று முதுநிலை இறுதியாண்டு மாணவிகளுக் கான வகுப்புகள் தொடங்கின. மாணவிகளுக்கான தங்கும் விடுதி திறக்கப்படாததால் அங்கு தங்கி படிக்கும் மாணவிகள் மட்டும் கல்லூரிக்கு வரவில்லை. மற்ற மாணவிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி காலை 10 மணிக்கு கல்லூரிக்கு வந்தனர்.

அவர்களை, கல்லூரி ஊழியர்கள் உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்த பின்னரே வகுப்பறைகளுக்கு செல்ல அனுமதித்தனர். மேலும் கல்லூரிக்கு வந்த அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்துவர வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி நேற்று கல்லூரிக்கு வந்த மாணவிகள் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். முக கவசம் அணியாமல் வந்த மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை.

சமூக இடைவெளி

பின்னர் வகுப்பறையில் ஒரு மேஜைக்கு ஒருவர் வீதம் மாணவிகள் அமர வைக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் வகுப்புகள் நடந்தன. அவர்களுக்கு அறிவியல் தொடர்பான செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. மாலை 4 மணி வரை கல்லூரி நடைபெற்றது.

8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டதால், மீண்டும் கல்லூரிக்கு வந்து தோழிகளை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர். மேலும், அவர்கள் தங்களின் தோழிகளுடன் செல்போன்களில் ‘செல்பி’ எடுத்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

பழனி

இதேபோல் பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மகளிர் கல்லூரி ஆகியவற்றில் இளநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவ- மாணவிகள் நேற்று கல்லூரிகளுக்கு வந்தனர். அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே வகுப்பறைகளுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக பழனி முருகன் கோவில் உதவி ஆணையரும், கல்லூரி செயலாளருமான செந்தில்குமார் மாணவ-மாணவிகளுக்கு சமூக இடைவெளியை பின்பற்றுவது, முக கவசம் அணிவது ஆகியவற்றின் அவசியம் குறித்து விளக்கம் அளித்தார்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் கல்லூரிகளிலும் இளநிலை இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டன.

Next Story