திண்டுக்கல்லில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
திண்டுக்கல்லில் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக சின்னபள்ளப்பட்டி பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
திண்டுக்கல்,
‘புரெவி’ புயல் வலு குறைந்தாலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் சாரல் மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய நீடித்தது. பின்னர் நேற்று காலை 11 மணி அளவில் பலத்த மழை பெய்தது. 2 மணி நேரம் நீடித்த இந்த மழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் பொதுமக்கள் கடைவீதிகள், பஸ் நிலைய பகுதிகளுக்கு சென்றனர். திருச்சி சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தின் சுற்றுச்சுவர் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. பகல் முழுவதும் நீடித்த இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
மேலும் திண்டுக்கல் சின்னபள்ளப்பட்டி ஏ.டி.காலனி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் புகுந்தது. இதனால் அவதிப்பட்ட அப்பகுதி மக்கள் வாளிகள் மூலம் மழைநீரை வெளியேற்றினர். மேலும் அப்பகுதியில் உள்ள தெருக்களையும் மழைநீர் சூழ்ந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்ட போது, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது.
ஆனால் அந்த கால்வாய் கழிவுநீர் வழிந்து செல்லும் வகையில் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக கழிவுநீர் வெளியேற முடியாமல் கால்வாயிலேயே தேங்கி கிடந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது பெய்த மழை காரணமாக கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து எங்கள் வீடுகளுக்குள் புகுந்துவிட்டது. எனவே சாக்கடை கால்வாயை முறையாக அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சண்முகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி அணைகள் நிரம்பியதால் அதில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் வரட்டாறு, சண்முகநதி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பழனியில் பகல் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சண்முகநதி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக கரையோரம் உள்ள மண்டபத்தினுள் தண்ணீர் புகுந்தது. பழனியை அடுத்த அ.கலையம்புத்தூர் கணேஷ்நகர் பகுதியில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்த மழையால் வடகாடு மலைப்பகுதியில் அமைந்துள்ள பரப்பலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 85.5 அடியை எட்டியது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 3 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையை ஒட்டன்சத்திரம் தாசில்தார் சுப்பையா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று நேற்று பார்வையிட்டனர். அப்போது அணையின் நீர்மட்டம் 88 அடியை எட்டியதும் தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story