பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவ, மாணவிகள்- பெற்றோர்கள் தர்ணா போராட்டம்


பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவ, மாணவிகள்- பெற்றோர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2020 11:43 AM IST (Updated: 8 Dec 2020 11:43 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்துறை,

பெருந்துறையில் இயங்கி வந்த சாலை போக்குவரத்து மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டு ஒரு ஆண்டாகிறது.

இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை 300 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியானது அரசு கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டும் கல்வி கட்டணம் இதுவரை குறைக்கப்படவில்லை. மற்ற அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை போன்று பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. எனினும் கல்வி கட்டணம் குறைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தர்ணா

இந்த நிலையில் மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் நேற்று காலை 10 மணி அளவில் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி வளாகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி கல்லூரி வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தங்களுடைய தர்ணா போராட்டத்தை கைவிட்டு மதியம் 12 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story