விவசாய விளைபொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைப்படி ஆதரவு விலையை வழங்கவில்லை - சட்டசபையில் மத்திய அரசு மீது சித்தராமையா குற்றச்சாட்டு
விவசாய விளைபொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைப்படி ஆதரவு விலையை வழங்கவில்லை என்று சட்டசபையில் மத்திய அரசு மீது சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் முன்னாள் மத்திய மந்திரிகள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 2-வது நாள் கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கேள்வி நேரம் முடிவடைந்ததும் காங்கிரசின் கோரிக்கையை ஏற்று விதி எண் 69-ன் கீழ் விவசாய விளைபொருட்களுக்கான ஆதரவு விலை குறித்த விவாதத்திற்கு சபாநாயகர் காகேரி அனுமதி வழங்கினார்.
இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு கர்நாடகத்தில் உணவு உற்பத்தி 10 லட்சம் டன் குறையும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இது விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவு ஆகும். நெல், பருத்தி, மக்காசோளம், சோளம், உளுந்து, எள் ஆகியவை தற்போது சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றை கொள்முதல் செய்ய கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 17 விளைபொருட்களுக்கு மத்திய அரசு ஆதரவு விலையை நிர்ணயம் செய்யவில்லை.
கர்நாடக அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவில்லை. இதனால் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் குறைந்த விலைக்கு அவற்றை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்படுகிறார்கள். கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 29 லட்சம் டன் நெல் சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 70 சதவீத நெல் மணிகளை ஆவது அரசு கொள்முதல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் ஆதரவு விலையால் விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும். இல்லாவிட்டால், விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைப்படி விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆதரவு விலையை வழங்கவில்லை. ஆதரவு விலை தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினேன். எந்த பதிலும் வரவில்லை. முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதினேன். அதற்கும் பதில் வரவில்லை. மாநில அரசு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி விவரங்களை கேட்டால் அவர்களும் தகவல் கொடுப்பது இல்லை. அதிகாரிகள் எதற்காக உள்ளனர்?. இதை அரசு என்று அழைக்க வேண்டுமா?.
நான் எழுதும் கடிதங்களை மாநில அரசு பார்ப்பதே இல்லை. வருகிற 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இது சாத்தியமா?. கர்நாடகத்தில் வழக்கமாக ஆண்டுக்கு 12.87 லட்சம் டன் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் வெள்ளம் காரணமாக இந்த ஆண்டு அது 2 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. நெல்லுக்கு கர்நாடக அரசு கூடுதலாக ஒரு டன்னுக்கு ரூ.500 வழங்க வேண்டும். துவரை கொள்முதல் அளவை ஒரு விவசாயிக்கு 40 குவிண்டாலாக அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Related Tags :
Next Story