நாகர்கோவிலில் டாக்டர்கள் தர்ணா போராட்டம் மருத்துவ மாணவர்களும் பங்கேற்பு


நாகர்கோவிலில் டாக்டர்கள் தர்ணா போராட்டம் மருத்துவ மாணவர்களும் பங்கேற்பு
x
தினத்தந்தி 9 Dec 2020 10:58 AM IST (Updated: 9 Dec 2020 10:58 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு டாக்டர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் மருத்துவ மாணவர்களும் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்,

இந்திய மருத்துவ சங்கம் மற்றும் குமரி மாவட்ட மருத்துவ சங்க கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்தில், ஆயுர்வேத டாக்டர்கள் மனித உடலை அறுவை சிகிச்சை செய்ய வழி வகுக்கும் வகையில் இந்திய வகை மருத்துவ மத்திய சபை அறிவித்துள்ள ஆணையை திரும்பப்பெற வேண்டும்.

இதற்காக ஏற்படுத்தப்பட்ட 4 குழுக்களை கலைக்க வேண்டும். ஆயுர்வேத டாக்டர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்படிப்பை ரத்து செய்ய வேண்டும். ஒவ்வொரு மருத்துவத்துறையையும் தனித்தனியாக வளர வைத்து அதன் கட்டமைப்பு, ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சீருடை அணிந்து...

போராட்டத்துக்கு குமரி மாவட்ட மருத்துவ சங்க கூட்டமைப்பு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் தாணப்பன், இந்திய பல் மருத்துவர் சங்க பொருளாளர் பெரில் மற்றும் டாக்டர்கள் ராதாகிருஷ்ணன், பிரவீன், ரஞ்சித், சிவகுமார், சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். டாக்டர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் மருத்துவ மாணவர்களும் பங்கேற்றனர்.

டாக்டர்கள் போராட்டமானது நோயாளிகளின் நலன்கருதி மதியம் 12 மணியில் இருந்து 2 மணி வரை மட்டும் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து டாக்டர்களும் சீருடை அணிந்திருந்தனர். அதிலும் சில டாக்டர்கள் ஸ்டெதஸ்கோப் அணிந்தபடி ஆஸ்பத்திரியில் இருந்து அப்படியே வந்திருந்தனர். ஏராளமான டாக்டர்கள் ஒரே இடத்தில் திரண்டு இருந்ததால் கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு ஏற்பட்டது.

வேலை நிறுத்தம்

இதே போல டாக்டர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் பயிற்சி டாக்டர்களும், முதுநிலை மாணவர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகள் எழுதப்பட்டு இருந்த பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில், ‘எங்களது அறவழி போராட்டத்துக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும். இல்லையெனில் அடுத்தகட்டமாக பொது அடையாள வேலை நிறுத்தம் மற்றும் அகில இந்திய அளவில் அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளிலும் உயிர் காப்பு அவசர சிகிச்சை தவிர அனைத்து வெளிநோயாளிகள் பிரிவுகள் நிறுத்தி வைத்தல் போன்றவை நடைபெறும்’ என்றனர்.

Next Story