காதல் மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை நாகர்கோவில் மகிளா கோர்ட்டு தீர்ப்பு


காதல் மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை நாகர்கோவில் மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 Dec 2020 11:09 AM IST (Updated: 9 Dec 2020 11:09 AM IST)
t-max-icont-min-icon

பள்ளியாடியில் காதல் மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் திங்கள்நகர் பெரியபள்ளியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 38), தச்சு தொழிலாளி. இவரும், பள்ளியாடி சாந்தன்விளையை சேர்ந்த வின்சி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உண்டு. திருமணம் முடிந்த சில மாதங்களில் சுந்தர்ராஜ் பல பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்ததாக தெரிகிறது. இதனை தட்டிக் கேட்ட வின்சியிடம் தகராறு செய்ததாகவும், வரதட்சணையாக நகை மற்றும் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த வின்சி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கிருந்தபடியே ஆசிரியர் பணிக்கு படித்து வந்தார். இதற்கிடையே வின்சியை குடும்பம் நடத்த வீட்டுக்கு வரும்படி சுந்தர்ராஜ் அழைத்துள்ளார். அதற்கு வின்சி மறுத்துவிட்டார்.

ஆயுள் தண்டனை

இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த சுந்தர்ராஜ் கடந்த 22-9-2011 அன்று இரவு பள்ளியாடியில் உள்ள வின்சியின் தந்தை வீட்டுக்கு சென்றார். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சுந்தர்ராஜ் உள்ளே வேறு யாரும் வர முடியாதபடி கதவு மற்றும் ஜன்னல்களை பூட்டினார். வீட்டில் குழந்தைகளுடன் இருந்த வின்சியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். அங்கிருந்து பின்வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தர்ராஜை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பிரபாசந்திரன் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட சுந்தர்ராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பிரபாசந்திரன் தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு குற்றவியல் வக்கீல் ஆர்.எம்.மீனாட்சி ஆஜராகி வாதாடினார்.

Next Story