தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல்-ஆர்ப்பாட்டம் - 367 பேர் கைது
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் சாலை மறியல்-ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து 367 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சார்பில் ‘பாரத் பந்த்’ என்ற பெயரில் நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
அதன்படி, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தேனி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், எஸ்.யு.சி.ஐ. ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் தேனி, கோம்பை, தென்கரை, போடி, சின்னமனூர் உள்ளிட்ட 8 இடங்களில் மறியலில் ஈடுபட்டனர்.
தேனியில் பள்ளிவாசல் தெருவில் இருந்து நேரு சிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சங்கரசுப்பு, கண்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம், நகர செயலாளர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
ஊர்வலம் நேரு சிலை சிக்னல் அருகில் வந்தபோது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்தவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 86 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், தி.மு.க., ஆதித்தமிழர் பேரவை, சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., சார்பில் தேனி, சின்னமனூர், கம்பம், ஆண்டிப்பட்டி உள்பட 16 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதுபோல் தேனி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம், போடி, உத்தமபாளையம் ஆகிய 3 இடங்களில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தேனி கோர்ட்டு முன்பு மூத்த வக்கீல் முத்துராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சிறிது நேரம் பஸ் மறியலில் ஈடுபட்டனர். உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வக்கீல்கள் சங்க செயலாளர் அழகர்ராஜா தலைமை தாங்கினார். மூத்த வக்கீல்கள், பார்த்திபன், சடமாயன், ஜோதி முருகதாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வக்கீல்கள் தீன் முகமது, லட்சுமிபதிராஜ், பாலமுருகன், அழகுமலை, உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்ட போதிலும் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. பெரியகுளம், சின்னமனூர், கம்பம் பகுதிகளில் மட்டும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் வேண்டுகோளை ஏற்று காலை நேரத்தில் பலர் கடைகளை அடைத்தனர். சிறிது நேரத்தில் பலர் மீண்டும் கடைகளை திறந்தனர். மாவட்டம் முழுவதும் சுமார் 22 ஆயிரம் கடைகள் உள்ள நிலையில், நேற்று சுமார் 1,000 கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டு இருந்தன.
அதேநேரத்தில் பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. பஸ் மறியல் நடந்த இடங்களில் மட்டும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி பஸ் நிலையம் அருகே தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ராஜாராம், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராமசாமி, மணி, ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தெப்பம்பட்டி சாலை பிரிவில் இருந்து ஆண்டிப்பட்டி பஸ் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.
கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் துரை.நெப்போலியன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி தலைவர் போஸ், ம.தி.மு.க. நகர செயலாளர் ராமகிருஷ்ணன், ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் கணேஷ்குமார், மாநில விவசாய அணி துணை செயலாளர் வேதா வெங்கடேஷ் தலைமையில் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காந்தி சிலை முன்பு கூடினர். பின்னர் அவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை முற்றுகையிடுவதற்காக அங்கிருந்து ஊர்வலமாக கருப்பு மையால் பூசிய பிரதமர் மோடியின் உருவப்பட பதாகையை ஏந்தி கொண்டு நடந்து வந்தனர். அப்போது அவர்களை போலீசார் வழிமறித்தனர். இதில் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவர்கள் கண்டன கோஷமிட்டனர், பின்னர் 63 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடமலைக்குண்டுவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர்கள் மச்சக் காளை, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய தொழிலாளர்கள் சங்க தேனி மாவட்ட செயலாளர் தயாளன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போடியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் வழக்கம் போல் ஓடின. இதனிடையே நேற்று காலை 8 மணி அளவில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கடைகளை அடைக்க வலியுறுத்தி இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். இதில் தி.மு.க போடி ஒன்றிய செயலாளர் எஸ்.லட்சுமணன், நகர செயலாளர் வீ.செல்வராஜ், காங்கிரஸ் நகர செயலாளர் முசாக் மந்திரி, இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் பாண்டியன் உள்பட பல்ர் கலந்து கொண்டனர். போடி கனரா வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் நடந்தது.
மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 21 பெண்கள் உள்பட 367 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக் கப்பட்டனர். மாலையில் அவர் கள் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story