ராமநாதபுரத்தில் மருத்துவ முறைகள் கலப்படத்திற்கு எதிர்ப்பு; டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


ராமநாதபுரத்தில் மருத்துவ முறைகள் கலப்படத்திற்கு எதிர்ப்பு; டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Dec 2020 6:25 PM IST (Updated: 9 Dec 2020 6:25 PM IST)
t-max-icont-min-icon

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கும் மருத்துவ முறை கலப்படத்திற்கு எதிர்த்து ராமநாதபுரத்தில் இந்திய மருத்துவ கழக டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராமநாதபுரம், 

இந்தியாவில் அலோபதி மருத்துவம், ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருத்துவ முறைகள் நடைமுறையில் உள்ளன. இதன்படி அவரவர் கற்ற மருத்துவ கல்வியின் அடிப்படையில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் மத்திய அரசு கலப்பட மருத்துவ முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி மத்திய இந்திய மருத்துவ குழுமம் ஆயுர்வேத மேல்படிப்பிற்கான ஒழுங்குமுறையை அறிவித்துள்ளது. இதில் 58 நவீன அறுவை சிகிச்சைகளை ஆயுர்வேத மருத்துவர்கள் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

எந்தவித முன்பயிற்சியும் அனுபவமும் இன்றி ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அளிப்பது என்பது ஏற்புடையது அல்ல என தெரிவித்து இந்த கலப்பட மருத்துவ முறையை கண்டித்து இந்திய மருத்துவ கழக அலோபதி டாக்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதன்படி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இந்திய மருத்துவ கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கலப்பட மருத்துவ முறை அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அதன் தலைவர் டாக்டர் அரவிந்தராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் ஆனந்தசொக்கலிங்கம், நிதி செயலாளர் டாக்டர்.ஆக்நெல், மாநில கவுன்சில் உறுப்பினர் சின்னத்துரை அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலப்பட மருத்துவ முறையை திரும்ப பெறாவிட்டால் வரும் 11-ந் தேதி கொரோனா சிகிச்சை தவிர்த்து இதர நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story