வத்திராயிருப்பு பகுதியில் தொடர்மழை: பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 27 அடியாக உயர்வு


வத்திராயிருப்பு பகுதியில் தொடர்மழை: பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 27 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 9 Dec 2020 1:13 PM GMT (Updated: 9 Dec 2020 1:13 PM GMT)

வத்திராயிருப்பு பகுதியில் பெய்த தொடர்மழையினால் பிளவக்கல் பெரியார் அணையின் நீர்மட்டம் 27 அடியாக உயர்ந்துள்ளது.

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழை மற்றும் சாரல் மழையால் வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியார் மற்றும் கோவிலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

கடந்த வாரம் அணையின் நீர்மட்டம் 21 அடியாக இருந்தது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக தற்போது பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 27 அடியாகவும், கோவிலாறு அணையின் நீர்மட்டம் 17 அடியாக உயர்ந்து உள்ளது. பிளவக்கல் பெரியாறு அணைக்கு 90 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் விவசாய பாசனத்திற்காக 63 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கோவிலாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக 20 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து நத்தம்பட்டி பெரியகுளம் கண்மாய்க்கும், மூவரை வென்றான் சாத்த நேரி கண்மாய்க்கும் தண்ணீர் சென்று கொண்டிருப்பதாகவும் வத்திராயிருப்பு சுற்றி உள்ள 40 கண்மாய்களில் 14 கண்மாய் முழு கொள்ளளவை எட்டி உள்ளதாகவும், 5 கண்மாய் 90 சதவீதம் நிரம்பி உள்ளதாகவும், மீதமுள்ள 21 கண்மாய்கள் 30 முதல் 75 சதவீதம் வரை நிரம்பி உள்ளதாகவும், அணைக்கு நீர் வரத்து வருவதை பொறுத்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் அதிகரித்து வருவதாலும், வத்திராயிருப்பு பகுதியை சுற்றி உள்ள கண்மாய்கள் நீர் நிரம்பி வருவதாலும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகள் மூலம் வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் 8,500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த ஆண்டு பெய்த மழையை விட இந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர். தொடர்ந்து மழை பெய்வதால், அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பதாலும் விவசாயிகள் தீவிரமாக சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story