16 வயது சிறுமியை கொத்தடிமையாக வைத்திருந்ததாக தஞ்சை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு புகார்


16 வயது சிறுமியை கொத்தடிமையாக வைத்திருந்ததாக தஞ்சை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 10 Dec 2020 7:54 AM IST (Updated: 10 Dec 2020 7:54 AM IST)
t-max-icont-min-icon

16 வயது சிறுமியை கொத்தடிமையாக வைத்திருந்ததாக தஞ்சை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கலெக்டரிடம் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து கலெக்டர் கோவிந்தராவ் அந்த சிறுமியிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆதி தெருவை சேர்ந்தவர் பவானி(வயது 52). இவர், ஆதரவற்ற நிலையில் கிடந்த பெண் குழந்தையை 16 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்து வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பவானி வீட்டிற்கு சென்ற குழந்தைகள் நல அமைப்பினர், உரிய அனுமதி பெறாமல் சிறுமியை வளர்ப்பது சட்டப்படி குற்றம் என கூறி சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த சிறுமியை தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டரான சந்திரா முறைப்படி தத்தெடுத்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் சந்திராவிற்கு மாற்றுத்திறனாளி மகன் உள்ள நிலையில், தத்தெடுத்த சிறுமியை வைத்து மகனுக்கு சாப்பாடு கொடுப்பது தொடங்கி அனைத்து பணிகளையும் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது.

சிறுமி பரபரப்பு புகார்

இதனால் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருவதாக சிறுமி, தனது வளர்ப்பு தாய் பவானிக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் நேற்று சந்திராவின் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி தனது வளர்ப்பு தாய் பவானி, அவரது உறவினர் கவிதா, தமிழ்நாடு தெய்வீக தமிழ் புரட்சி பாசறை நிறுவனர் மதனகோபால் ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இன்ஸ்பெக்டர் சந்திரா தன்னை கொத்தடிமையாக நடத்தி வருவதாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

பின்னர் கலெக்டரிடம் மதனகோபால் கொடுத்த புகார் மனுவில், “சிறுமியை, தனது வீட்டில் கொத்தடிமையாக வைத்ததோடு, மாற்றுத்திறனாளியான தனது மகனுக்கு பணிவிடைகளை செய்ய பயன்படுத்தி உள்ளார். இதனால் அந்த சிறுமி 2 முறை தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி தனது வளர்ப்பு தாய் வீட்டிற்கு செல்வதாக கூறியதற்கு, சிறுமியையும், அவருடைய உறவினர்களையும் திருட்டு வழக்கு போட்டு சிறையில் தள்ளி விடுவதாக மிரட்டி உள்ளார். எனவே இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்”என கூறி இருந்தார்

கலெக்டர் விசாரணை

இந்த புகார் தொடர்பாக சிறுமியிடம், கலெக்டர் கோவிந்தராவ் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். பின்னர், சிறுமியை அரசு காப்பாகத்தில் வைக்க குழந்தைகள் நல அமைப்பினருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் சிறுமியை காப்பக்கத்திற்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து பவானி கூறுகையில், “சிறுமி 8-வது படித்து கொண்டிருக்கும்போது, குழந்தைகள் நல அமைப்பினர், சிறுமியை அழைத்து சென்று விட்டனர். பின்னர் சிறுமி குறித்து எந்த தகவலும் எனக்கு தெரிவிக்கவில்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமி போன் செய்து இன்ஸ்பெக்டர் சந்திரா வீட்டில் உள்ளேன். என்னை இங்கு கொத்தடிமையாக நடத்துகின்றனர் என கூறினார்” என்றார்.

காப்பகத்தில் சிறுமி

தஞ்சை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் நடராஜன் கூறுகையில், சிறுமியிடம் கலெக்டர் விசாரணை நடத்திய நிலையில், காப்பகத்தில் வைத்து சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுக்க தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு தினங்கள் கழித்து மீண்டும் கலெக்டர் விசாரணை நடத்துவதாக கூறினார்” என்றார்.

Next Story