குடிமராமத்து பணிகளால் நீர்நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


குடிமராமத்து பணிகளால் நீர்நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 10 Dec 2020 7:21 PM IST (Updated: 10 Dec 2020 7:21 PM IST)
t-max-icont-min-icon

குடிமராமத்து திட்டப்பணிகளால் நீர் நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

மதுரை மாநகராட்சி மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு வைகை ஆற்றில் இருந்து பனையூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டு உள்ளது. அதனை மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.

குடிமராமத்து பணி திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் உள்ள ஊருணிகள் எல்லாம் நிரம்பி உள்ளன. மாநகரில் உள்ள மாடக்குளம், வண்டியூர் கண்மாய்கள் எல்லாம் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கின்றன. அதன் மூலம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. அதனால் மக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாது. வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதன் காரணமாக மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏ.வி.பாலம் அருகில் தடுப்பணை கட்டப்பட்டு அதன் அருகாமையில் ரூ.50 லட்சம் செலவில் ஷட்டர் அமைக்கப்பட்டு பனையூர் கால்வாய்க்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டு மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. வைகை ஆற்றில் வரும் தண்ணீரை அப்படியே கொண்டு செல்லாமல் மாநகராட்சி-பொதுப்பணித்துறை மூலம் 3 இடங்களில் வடிக்கப்பட்டு சுத்தமான தண்ணீர் தெப்பக்குளத்திற்கு செல்கிறது. மாரியம்மன் தெப்பக்குளம் திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட போதே, கழிவுகள் சேராமல் சுத்தமான தண்ணீர் தேக்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இனி வைகை ஆற்றில் தண்ணீர் செல்லும் போது எல்லாம் தெப்பக்குளத்தில் நீர் நிரப்பப்பட்டு விடும். தற்போது தெப்பக்குளத்தில் 15 அடிக்கு நீர் தேக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சரியான திட்டமிடுதலால் 3-வது முறையாக தெப்பக்குளம் நிரம்பி உள்ளது. மதுரை மாநகரின் மெரினாவாக தெப்பக்குளம் திகழ்கிறது. கொரோனா காலத்தில் வாகனங்கள் அதிக அளவு செல்லாத காரணத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு மழை அதிகம் பெய்து உள்ளது.

மதுரை மாநகரின் 50 ஆண்டு கால குடிநீர் தேவையை முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் பூர்த்தி செய்து தரும். முதல்-அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த திட்டம் 2023-ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்து விடும். மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி வருவதால் மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். நாங்கள் மக்கள் பக்கம் உள்ளோம். அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் அளவிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story