ஆ.ராசாவின் பேச்சுக்கு சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் அமைச்சர் உதயகுமார் பேட்டி
வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆ.ராசாவின் பேச்சுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரை,
மழையால் சேதடைந்த வீடுகளில் வசித்த 59 பேருக்கு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிதியுதவி வழங்கினார். இதில் கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 36 மாவட்டங்களிலும் தகுந்த புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதனால் நிவர், புரெவி புயலில் உயிரிழப்பு, பொருட்கள் சேதம் தவிர்க்கப்பட்டது. சீரமைப்பு பணிக்காக ரூ.3,700 கோடி தேவைப்படுவதாக மத்தியக்குழுவிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு ஏற்கனவே ரூ.650 கோடி பேரிடர் நிவாரணம் வழங்கிய நிலையில் மேலும் ரூ.680 கோடி நிவாரண நிதி வழங்க உள்ளது.
மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. பயிர் சேதாரம் குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும். 5 புயல்கள் வருவதாக வரும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். மத்திய பேரிடர் நிதியை எதிர்பார்க்காமல் மாநில பேரிடர் நிதியில் இருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்டாலின் குற்றச்சாட்டு வைக்கும் முன்னரே முதல்-அமைச்சர் நடவடிக்கைகள் எடுத்து விடுகிறார். மழை காலங்களில் மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
3 வேளாண் சட்டங்களால் விளை பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யலாம். தமிழக விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே தான் தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் தோல்வி அடைந்து விட்டது. 2016-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வேளாண் சட்டத்தின் சாராம்சத்தை வாக்குறுதியாக கொடுத்து விட்டு இன்றைக்கு மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் போராடுகிறார்கள். விவசாயிகளை எதிர்கட்சிகள் ஏமாற்ற நினைக்கிறது.
தி.மு.க.வின் பேச்சால் அ.தி.மு.க. தொண்டர்கள் கொதிப்பு அடைந்துள்ளனர். ஜெயலலிதா இல்லாத காலத்தில் அவரை அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட வழக்கு காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் 2-ஜி வழக்கு நிலுவையில் உள்ளதை ஆ.ராசா ஞாபகம் கொள்ள வேண்டும். 2 ஜி வழக்கு நிலுவையில் உள்ள பொழுது எப்படி பொது வெளியில் விவாதிக்க முடியும். எனவே ஆ.ராசா பொது வெளியில் மிக கவனமாக பேச வேண்டும். அவரது பேச்சுக்கு சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story