நாமக்கல், பரமத்தி வேலூர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி
நாமக்கல், பரமத்தி வேலூர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சாரல்மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பல்வேறு இடங்களில் சாரல்மழை நீடித்தது. அதிகபட்சமாக கொல்லிமலை மற்றும் மங்களபுரம் பகுதிகளில் 9 மி.மீட்டர் மழைபதிவானது.
நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
மங்களபுரம்-9, கொல்லிமலை-9, எருமப்பட்டி-5, சேந்தமங்கலம்-5, நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-4, நாமக்கல்-4, திருச்செங்கோடு-3, மோகனூர்-3, குமாரபாளையம்-3, ராசிபுரம்-2.
இதற்கிடையே நேற்று அதிகாலை முதல் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நீடித்தது. இதனால் அருகே செல்பவர்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக காட்சி அளித்தது.
இந்த பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். காலை 7 மணிக்கு கூட முகப்பு விளக்கை எரியவிட்டவாறு மெதுவாக வாகனங்களை ஓட்டி செல்வதை பார்க்க முடிந்தது. இதேபோல் வேலைக்கு செல்லும் நபர்களும் குல்லா, சொட்டர் அணிந்து செல்வதை பார்க்க முடிந்தது. காலை 7.30 மணி அளவில் சூரியனின் கதிர்கள் பூமியில் விழ தொடங்கியதும், மெதுவாக பனிமூட்டம் விலகியது. இரவில் மழை, காலையில் பனிப்பொழிவு என இருவேறு சீதோஷ்ணநிலை நிலவியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. காலை 7.30 மணியை தாண்டியும் பனியின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
மேலும் நகர்புறம் மற்றும் நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி, மிதமான வேகத்தில் சென்றனர். காலையில் கடுமையான பனிப்பொழிவு இருந்ததன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பூக்களை பறிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story