வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 140 பேர் கைது
வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் 140 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை எதிர்த்தும், சேலம் பழைய பஸ் நிலையம் காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் திருத்த சட்டங்களையும் விலக்கி கொள்ள வேண்டும் என்பது தான் விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த சட்டங்களை நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றவில்லை என்பது தான் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு. நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாரதீய ஜனதா அரசு குழி தோண்டி புதைத்து விட்டது.
2 கோடி பேர், ஒரு லட்சம் டிராக்டருடன் டெல்லியை சுற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் போராட்டத்தை விலக்கி கொள்ளவில்லை. இந்தியா முழுவதும் இந்த சட்டத்தை எதிர்த்து வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதன்மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பாரதீய ஜனதா அரசு செயல்படுகிறது என்பது தெளிவாகிறது. விவசாயிகளை அடிமையாக்கும் இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்பை பலப்படுத்துவது மத்திய அரசின் கடமை. எனவே கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.
ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்ட எந்த அரசும் நீடித்த வரலாறு கிடையாது. நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்கள் உள்ளார்கள் என்று நினைத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் சர்வாதிகார உச்சத்தில் மத்திய அரசு செயல்படுகிறது.
வேளாண் திருத்த சட்ட விவகாரத்தில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார். அவருக்கு சட்டமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அப்போது யார் விவசாயிகள் பக்கம்? யார் மக்கள் பக்கம்? என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கரும்பு, ஏர் கலப்பை உள்ளிட்டவைகளை கையில் ஏந்தியபடி வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து ஊர்வலமாக காங்கிரஸ் கட்சியினர் செல்ல முயன்றனர். இதையடுத்து அனுமதியின்றி ஊர்வலமாக செல்ல முயன்றதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 140 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
Related Tags :
Next Story