பெரம்பலூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் அம்மை நோயால் மாடுகள் சாவு; கால்நடை வளர்ப்போர் கவலை


கீழக்கணவாய் கிராமத்தில் அம்மை நோயால் உயிரிழந்த கன்றுக்குட்டியை படத்தில் காணலாம்.
x
கீழக்கணவாய் கிராமத்தில் அம்மை நோயால் உயிரிழந்த கன்றுக்குட்டியை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 10 Dec 2020 8:00 PM GMT (Updated: 10 Dec 2020 6:20 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் அம்மை நோயால் மாடுகள் இறப்பதால், கால்நடை வளர்ப்போர் கவலை அடைந்துள்ளனர்.

அம்மை நோய்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் பசு, காளை மாடுகளுக்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. அம்மை நோயால் பசு, காளை மாடுகளின் தோலில் புண், கழுத்தில் அல்லது காலில் வீக்கம் மற்றும் காய்ச்சலுடன் காணப்படுகின்றன. இதனால் மாடுகள் சுணக்கமடைந்து, உடல்நிலை பாதிப்புடன் உள்ளன.

மாவட்டத்தில் அம்மை நோய்க்கு ஏராளமான மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மை நோயினால் பசு மாடுகளிடம் பால் உற்பத்தியும் குறைந்துள்ளது. இந்நிலையில் கீழக்கணவாய் கிராமத்தில் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட காளை கன்றுகுட்டி ஒன்று நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதேபோல் அனுக்கூர் உள்ளிட்ட சில கிராமங்களில் அம்மை நோயால் சில மாடுகளும் உயிரிழந்து வருகின்றன. இதனால் கால்நடை வளர்ப்போர் கவலை அடைந்துள்ளனர்.

தடுப்பூசி போட...
ஆனால், இந்த தொற்றை முன்கூட்டியோ அல்லது வந்த பிறகோ தடுக்க அரசு கால்நடை மருத்துவமனை, மருந்தகங்களில் போதிய மருந்து இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அம்மை நோயை போக்கும் நாட்டு மருந்துகளை கொடுப்பதில் விவசாயிகள் முனைப்பு காட்டுகின்றனர். மேலும் தனியார் கால்நடை மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை மேற்கொள்ள செலவு அதிகமாகிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் கால்நடைத்துறை பராமரிப்பு துறையினர் மூலம் ஆய்வு மேற்கொண்டு, அம்மை நோய் பாதித்த பசு, காளைகளை கணக்கீடு செய்து, தடுப்பூசி போடவும், அரசு மூலம் சிகிச்சை அளிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை மருந்தகங்களில் இதற்கான தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story