திருமணத்தன்று மாயமானதால், அக்காளுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு தங்கையுடன் திருமணம்; புதுக்கோட்டை அருகே பரபரப்பு
திருமணத்தன்று மாயமானதால் அக்காளுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு தங்கையுடன் திருமணம் நடைபெற்றது.
திருமண பெண் மாயம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராஜ்குமார் (வயது 30). இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா மருங்குப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மூத்த மகளுக்கும் திருமணம் செய்ய உறவினர்களால் நிச்சயம் செய்யப்பட்டு, நேற்று திருமணம் செய்துவைக்க முடிவு செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து ஆலங்குடியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து கோவில் முன்பு விளம்பர பேனர்கள் போன்றவை மணமக்கள் வீட்டார்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மணப்பெண் திடீரென மாயமானதாக மணமகன் வீட்டாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
தங்கையுடன் திருமணம்
இதையடுத்து மாப்பிள்ளையின் உறவினர்கள் மருங்கப்பள்ளம் சென்று பெண் வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண் வீட்டார், அவளுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று கூறினர். பின்னர் பெண் வீட்டார் பெண்ணின் தங்கை ஆசிபாவுக்கு 19 வயது ஆகிறது. எனவே ராஜகுமாருக்கு, ஆசிபாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்கு இணங்கிய மணமகன் வீட்டார் அவர்கள் சொன்னபடி இருவருக்கும் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து கோவிலில் வைக்கப்பட்டிருந்த திருமண பேனர்களை அவிழ்த்து எடுத்தனர். பின்னர் ராஜ்குமாருக்கும், ஆசிபாவுக்கு திருமணம் நடைபெற்றது. நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானதை அடுத்து, தங்கைக்கு அடித்தது திடீர் யோகம் என உறவினர்கள் கூறி மணமகள் ஆசிபாவை வாழ்த்தி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story