நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கான வேகம் எவ்வளவு?; மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
“நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கான அனுமதிக்கப்பட்ட வேகம் எவ்வளவு?” என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தடுப்புகளால் விபத்துகள்
மதுரையைச் சேர்ந்த சரவணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ஒவ்வொரு சாலையிலும் ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக தொழிற்சாலைகள், நிறுவனங்களின் முன்பு சாலையின் நடுவில் தடுப்புகளை அந்தந்த நிறுவனங்கள் வைத்துக்கொள்கின்றன. இந்த தடுப்புகளில் பிரபல நிறுவனங்கள் தங்களின் விளம்பரங்களை வரைந்து உள்ளனர். இந்த தடுப்புகள் சாலைகளில் வைக்கப்பட்டு உள்ளதை தூரத்தில் இருந்து வரும்
வாகனங்கள் தெரிந்து கொள்ள வசதியாக ஒளிரும் ஸ்டிக்கர்களை தடுப்புகளில் ஒட்டுவதில்லை. இதனால் தூரத்தில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் சாலைகளின் நடுவில் உள்ள தடுப்புகளில் மோதி விபத்தில் சிக்குகின்றன. இதுபோன்ற காரணங்களால் கடந்த ஆண்டு மட்டும் 57,228 விபத்துகள் நடந்து உள்ளன. இந்த விபத்துகளில் சிக்கி, 67 ஆயிரத்து 132 பேர் காயம் அடைந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்து உள்ளனர்.
கால்நடைகளும் காரணம்
சாலை விபத்துகளுக்கு சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளும் மற்றொரு முக்கிய காரணம். இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தமிழகத்தில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும், பொது இடங்களிலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்கவும், நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும். எந்தெந்த இடங்களில் தடுப்புகள் வைக்கலாம் என்பது குறித்து முறையான வழிகாட்டுதல்களை பிறப்பிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
வேகம் எவ்வளவு?
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன? சாலைகளில் உள்ள தடுப்புகளில் தனியார் விளம்பரங்கள் ஏன் இடம் பெறுகின்றன? தொடர்ந்து, சாலைகளில் வாகனங்கள் அதிவேகமாக சென்றதாக எவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?” என கேள்வி எழுப்பினர்.
பின்னர் இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story