விவசாயிகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2020 5:40 AM IST (Updated: 11 Dec 2020 5:40 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை நிறுத்த முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுவை அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் தமிழ்மாறன், பொதினிவளவன், முன்னவன், செல்வ.நந்தன், செந்தமிழ்செல்வன், அரிமாத்தமிழன், எழில்மாறன், கார்முகில், சுடர்வாளன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்

ஆர்ப்பாட்டத்தின்போது ரவிக்குமார் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து பொதுமக்களை பாதிக்கும். இதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பா.ஜ.க. அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். நாட்டு மக்களின் நலனுக்காக விவசாயிகள் நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்கும். அதானி மற்றும் அம்பானி நிறுவன பொருட்களை தமிழகம் மற்றும் புதுவையில் வாங்காமல் நமது எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story