மதுரையில் இருந்து திருவனந்தபுரம், தாம்பரம், தாதருக்கு சிறப்பு ரெயில்கள்
மதுரையில் இருந்து திருவனந்தபுரம், தாம்பரம், தாதர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்ரிதா எக்ஸ்பிரஸ்
கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, தென் மாவட்டங்களில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ரெயில்கள் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டு வருகின்றன. இதைதொடர்ந்து, திருவனந்தபுரம், தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு தற்போது ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து பொள்ளாச்சி, பழனி வழியாக மதுரைக்கு இயக்கப்படும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 23-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்(வ.எண்.06343) திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து வருகிற 24-ந் தேதி முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்(வ.எண்.06344) மதுரையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.
இந்த ரெயில் வர்க்கலா, கொல்லம், காயன்குளம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, பாலக்காடு டவுன், கொல்லங்கோடு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் ரெயில் மட்டும் கருநாகப்பள்ளி, மாவேலிக்கரா, திருவல்லா, செங்கனாச்சேரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தாம்பரம்
தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு வாரம் 3 முறை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 16-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்(வ.எண்.06065) தாம்பரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து இந்த சிறப்பு ரெயில்(வ.எண்.06066) 17-ந் தேதி முதல் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நெல்லையில் இருந்து பிலாஸ்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்.06070) வருகிற 13-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் நள்ளிரவு 1.15 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை இரவு 9.35 மணிக்கு பிலாஸ்பூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் பிலாஸ்பூரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(வ.எண்.06069) வருகிற 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பிலாஸ்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமைகளில் காலை 8.15 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை அதிகாலை 3.15 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
தாதர்
நெல்லையில் இருந்து கொங்கன் ரெயில் பாதை வழியாக தாதருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்(வ.எண்.06072) வருகிற 16-ந் தேதியில் இருந்து 30-ந் தேதி வரை புதன்கிழமைகளில் நெல்லையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு தாதர் ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் தாதரில் இருந்து நெல்லைக்கு வருகிற 17-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்(வ.எண்.06071) தாதரில் இருந்து வியாழக்கிழமைகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.55 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
இந்த ரெயில்கள் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், மங்களூரு, உடுப்பி, ஹொன்னவர், கார்வார், திவிம், மட்கான்(கோவா), கங்கவளி, ரத்தினகிரி, சிப்லன், பன்வெல், தானே ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் நெல்லையில் இருந்து தாதருக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் மட்டும் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
இந்த ரெயில்களில் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story