தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் தேங்கி நின்ற மழைநீர் வெளியேற்றம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்


தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் தேங்கி நின்ற மழைநீர் வெளியேற்றம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
x
தினத்தந்தி 11 Dec 2020 9:55 AM IST (Updated: 11 Dec 2020 9:55 AM IST)
t-max-icont-min-icon

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் தேங்கி நின்ற மழைநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. உலக அளவில் பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் தொடர் மழை காரணமாக தண்ணீர் தேங்கியது. கோவிலின் முன் பகுதியில் உள்ள நந்திமண்டபம், கோவிலை சுற்றி உள்ள அகழி மற்றும் கோவில் பிரகாரம் முழுவதும் மழைநீர் தேங்கி நின்றதால் பக்தர்களால் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. கோவில் பகுதியில் இடுப்பளவு மழைநீர் தேங்கி நின்ற நிலையில் கடந்த 2 நாட்களாக கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் மழை பெய்யவில்லை. ஆனாலும் கோவிலில் தேங்கி நின்ற மழைநீர் வடியவில்லை.

வெளியேற்றம்

கோவிலில் நிரந்தர வடிகால் இல்லாததால் தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் மழைநீரை வெளியேற்ற மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார்.

அதன்படி பல்வேறு இடங்களில் இருந்து ராட்சத மோட்டார்கள் வரவழைக்கப்பட்டு மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வந்தது. தற்போது மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. ஆங்காங்கே சிறிதளவு தண்ணீர் மட்டுமே தேங்கி உள்ளது. இதனால் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Next Story